BATTERY BIKE THAT TRAVELS 60 KM AT A COST OF 10 RUPEES IS INTRODUCED IN THENI DUE TO PETROL PRICE HIKE VIDEO VAI
பெட்ரோல் விலை உயர்வு... 10 ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் பேட்டரி பைக் அறிமுகம்
அதிகரிக்கும் பெட்ரோல் விலைக்கு மத்தியில், 10 ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ளக்கூடிய பேட்டரி பைக், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது சாத்தியம்தானா...
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், போக்குவரத்து வசதிகள் அதிநவீனமாக மேம்பட்டுள்ளன. ஆனால், இன்றளவும் நடுத்தர வர்க்கத்தின் கனவு வாகனமாக இருப்பது இருசக்கர வாகனங்கள். சமீப காலமாக அதிகரித்து வரும். பெட்ரோல், டீசல் விலையால், இருசக்கர வாகன பயன்பாட்டையே தவிர்க்கும் கட்டாயயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், குறைந்த செலவில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய பேட்டரி பைக்கை, தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கும், வைக் பைக் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. குறைந்த எடையுடன், சராசரியான வேகத்தில் செல்லக்கூடியவையாக இருக்கின்றன இந்த பைக்குகள்.. தற்போதைய பெட்ரோல் விலை உயர்வால் இதன் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.
இந்த வாகனத்தில், வேகம், பேட்டரித் திறன் உள்ளிட்டவற்றை காட்டும் எலக்ட்ரானிக் திரை இடம்பெற்றுள்ளது. முன்பகுதியில் அதிக இடவசதி, ரிமோட் மூலம் இயக்குவது மற்றும் பின்னோக்கி செல்லும் வசதியும் உள்ளது. முகப்பு விளக்கு, இன்டிகேட்டர் என அனைத்திலும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரு நபர்கள் வரை பயணிக்கக் கூடிய இந்த வாகனத்தின், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. செல்போனை சார்ஜ் செய்வது, வாகனம் திருடப்படுவதை தடுப்பது போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேட்டரியை மட்டும் மாற்றினால் போதுமானது என்பதோடு, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இழுவை திறன் மாற்றி அமைத்தும் தரப்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும், ஒரு தீர்வாக அமைந்துள்ள இந்த பேட்டரி பைக் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக தேனி செய்தியாளர் சுப.பழனிக்குமார்.