கடன் வாங்கி திரும்பச் செலுத்தவில்லை - பா.ஜ.க பிரமுகர் புகைப்படத்துடன் பரோடா வங்கி அறிவிப்பு

திருச்சி ஆக்ஸ்போர்டு சுப்ரமணியன்

பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தவில்லை என்று பரோடா வங்கி புகைப்படத்துடன் நாளிதழ்களில் செய்திவெளியிட்டுள்ளது.

  • Share this:
திருச்சி அண்ணாமலை நகரைச் சேர்ந்த சுப்ரமணியன். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர். மாநிலத் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். தற்போது, தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும், சிவகங்கை மாவட்டத் தேர்தல் பார்வையாளராகவும் உள்ளார்.

இவர், மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.
திருச்சி பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி, சிறுகனூரில் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, துறையூரில் ஜெயராம் பொறியியல் கல்லூரி என  3 பொறியியல் கல்லூரிகளை நடத்தி வருபவர். கே.எஸ்.எம் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் சுப்ரமணியனும், அவரது மனைவி நிர்மலாவும் அறங்காவலர்களாக இருந்து கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி மண்ணச்சநல்லூர் பரோடா வங்கியில் இக்கல்லூரிகள் உள்ளிட்ட சொத்துக்களைக் காட்டி, அறக்கட்டளை பெயரில் இவர்கள் இருவரும் கடன் வாங்கியுள்ளனர்.
கடனை திரும்ப செலுத்தாத நிலையில், வங்கி அனுப்பிய நோட்டீஸ்களுக்கு உரிய விளக்கமும் அளிக்கவில்லை.

அதையடுத்து, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, சுப்ரமணியன், அவரது மனைவி நிர்மலா ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு ஒன்றை, பரோடா வங்கி இன்றைய நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், இவர்கள் இருவரும் 'தெரிந்தே தவறு செய்தவர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்தாததால், இவர்களின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் விரைவில் கையகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

செய்தியாளர்: கதிரவன்.
Published by:Karthick S
First published: