• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? – சீமான் கேள்வி

ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? – சீமான் கேள்வி

சீமான்

சீமான்

முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது.

  ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

  Also read: கடன்கார ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது: எச்.ராஜா விமர்சனம்

  திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் 78 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 10 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் அவர்களை அரசு கண்டுகொள்ள மறுக்கவே வேறு வழியற்ற நிலையில் தூக்க மாத்திரை உட்கொண்டும், கத்தியால் உடலில் அறுத்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் மனவலியைத் தருகிறது.

  தமிழ்நாட்டிலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத சூழலில் நிறுத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

  இலங்கையை ஆளும் சிங்களப்பேரினவாத அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, பன்னெடுங்காலமாக அந்நிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இனஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்பட்டு, நிர்கதியற்ற நிலையில் மறுவாழ்வுக்காகத் தாய்த்தமிழகத்தை நம்பி அடைக்கலம் புகும் ஈழச்சொந்தங்களுக்கு அதிகப்படியான முன்னுரிமை தந்து, கூடுதலான வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்குறிக்கலாம்.

  அதற்கு மாறாக, அவர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, வாழவேவிடாது நாளும் துன்புறுத்தி அல்லலுக்கு உள்ளாக்கும் இத்தகைய கொடும் முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்கூறுவது கேலிக்கூத்தானது. சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் இவ்வதைக்கூடங்கள் ஈழச்சொந்தங்களின் அடிப்படை சனநாயக உரிமைகளையே முற்றாக மறுத்து, தினமும் அவர்களைத் துயருக்குள் ஆழ்த்தி பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.

  ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப்பேரினவாத அரசால் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? என எழும் கேள்விக்கு என்ன பதிலுண்டு? இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் பலகட்டமாகப் போராடியும், கருத்துப்பரப்புரை செய்தும், தேர்தல் மேடைகளில் கோரிக்கையாக வைத்தும் அதனை ஆளுகிற அரசுகள் செய்ய மறுத்து வருவது தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் திராவிடக்கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையையே உணர்த்துகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்திற்குள் வாழ தஞ்சம் கேட்டு வரும் ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப்பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து இரட்டைவேடமிடுவது வெட்கக்கேடானது.

  ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உடல் நலிவுற்றிருக்கும் ஈழச்சொந்தங்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற தகுந்த மருத்துவச்சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: