Home /News /tamil-nadu /

விதிமுறைகளை மீறி வங்கிக் கடன் வழங்கிய மேலாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை! தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்திலேயே மயக்கம்

விதிமுறைகளை மீறி வங்கிக் கடன் வழங்கிய மேலாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை! தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்திலேயே மயக்கம்

வங்கி மேலாளர்

வங்கி மேலாளர்

வங்கியில் அளவுக்கதிகமாக கடன் பெற்ற வழக்கில் அதிமுக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக எம்.பி ராமச்சந்திரன் தன்னுடைய கல்லூரி மேம்பாட்டிற்காக வங்கியில் இருந்து 20 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

இதற்கு லஞ்சமாக வங்கி மேலாளர் தன்னுடைய மகனுக்கு அமெரிக்கா செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அதன்படி ராமச்சந்திரனின் கல்வி நிறுவன அறக்கட்டளையான கண்ணம்மாள் அறக்கட்டளை நிதியில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு 2,69,000 ரூபாய் செலவில் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் ரூ.15 கோடிக்கு மேல் கடன் கொடுக்கக்கூடாது என்ற சூழ்நிலையில் 20 கோடி ரூபாயை இவர் கடனாக பெற்றிருப்பது குறித்து தணிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சி.பி.ஐ இந்த வழக்கை எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதன் அடிப்படையில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணியிலிருந்து விசாரணை நடைபெற்றது. பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதி எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் அடிப்படையில் அதிமுக எம்.பி ராமச்சந்திரன் அவரது மகன் ராஜசேகரன் வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு குற்றங்களின் அடிப்படையில் அபராத தொகையும் விதிக்கப்பட்டது. ராமச்சந்திரனுக்கும் அவரது மகன் ராஜசேகரனுக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை கேட்ட உடன் தியாகராஜன், நீதிபதி அறையிிலேயே மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவர்கள் சுமார் அரை மணி நேரம் அங்கேயே சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே நீதிபதியிடம் அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். தன்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே தன்னை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை மறுத்த நீதிபதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அதனால், வங்கி மேலாளர் அங்கேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி கேன்சர் நோயைக் காட்டிலும் லஞ்சம் ஊழல் வேகமாக பரவி வருகிறது. வைரசைக் காட்டிலும் வேகமாக இந்த நோய் பரவி வருவதால் இதை தடுப்பதற்கு இத்தகைய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.

Also see:

Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி