Home /News /tamil-nadu /

Bank Strike : இன்றும் பேங்க் ஸ்டிரைக்... முதல் நாளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிப்பு

Bank Strike : இன்றும் பேங்க் ஸ்டிரைக்... முதல் நாளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிப்பு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

வேலைநிறுத்தம் குறித்து தெரியாமல், நேற்று வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள், இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில், நாடு முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்காக வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 9 வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய அளவில் இரண்டுநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கினர். பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிக்கிளைகள் மூடப்பட்டன.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடாவிட்டால், அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்தார்.

    சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல அலுவலகம் முன்பு, திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் ராமராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டதால், சிறு, குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்றவற்றின் கிளைகள் முன்பு, வங்கி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூரில் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு, வங்கி அனைத்து அலுவலர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் சுமார் 80 வங்கிக்கிளைகள் மூடப்பட்டன. வேலைநிறுத்தம் குறித்து தெரியாமல், வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    Must Read : இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கெல்லாம் மழை பெய்யும்?

    புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக யூகோ முதன்மை வங்கி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து வங்கிகள் தனியார்மயமாக்கத்தை கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்கள் போராட்டத்தால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஏடிஎம் சேவைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bank Strike, SBI

    அடுத்த செய்தி