BANGARU ADIGALAR MEETS PM MODI DURING HIS CHENNAI VISIT ARU
சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்த பங்காரு அடிகளார்.. பொன்னாடை போர்த்தி மரியாதை!
பங்காரு அடிகளார்
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்துக்கு வந்தார். அங்கு அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கு விழா மேடைக்கு வந்த மோடி வண்ணாரபேட்டை - விம்கோ மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தமிழில் உரை தொடங்கிய பிரதமர் மோடி வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று பேசினார். தமிழக மீனவர்கள் நலன், தேவேந்திர குல வேளாளர் ஏற்பு உள்ளிட்டவற்றை பேசிய பிரதமர் மோடி அவ்வையார், மகாகவி பாரதியார் ஆகியோரின் பாடல்களையும் மேற்கொள் காட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி உடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிப்ரவரி 25-ம் தேதி கோவை வர உள்ள நிலையில் இவர்களது ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வார்லால் புரோஹித் , அப்பல்லோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரின் மகள் பீரித்த ரெட்டி ஆகியோரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.