ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 15 அறைகள் இடிந்து தரைமட்டமானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில், 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஐந்தரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாத்தூர் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சாத்தூர், சிவகாசி, மதுரை அரசு மருத்துவமனைகளில் வைக்கப்படிருந்த 16 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. உறவினர்கள் கண்ணீர் மல்க உடல்களை பெற்றுக் கொண்டனர். மேலும், அவர்களிடம் அரசின் நிவாரண தொகைக்கான காசோலையும், இறுதி சடங்கிற்கான ரொக்க பணமும் வழங்கப்பட்டது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் மூன்று பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.
வெடிவிபத்துக்கு காரணமான ஆலையின் குத்தகைதாரர் பொன்னுபாண்டியை போலீசார் கைதுசெய்தனர். ஆலை உரிமையாளர் சந்தனமாரி மற்றும் 4 குத்தகைதாரர்கள் தலைமறைவாக உள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். வேலூர்மாவட்டம் காங்கேயநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உயிரிழப்பைத் தடுக்க பட்டாசு தொழிலுக்கு மாற்றுத் தொழிலை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வெள்ள நிவாரணத்திற்காக தற்போது மத்திய அரசு 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பது தேர்தலுக்காகவே என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர் வெடி விபத்துக்களை தடுக்க, தொழிற்சாலைகளை தமிழக அரசு நவீனப்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai murugan, Sattur