பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு... முதலிடம் பிடித்த காளை, காளையர் அறிவிப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு

18 காளைகளை தழுவிய கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

  • Share this:
    தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர்.

    நேற்று, காளையை அடக்கியதில் இருவருக்கு முதல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 8 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. அதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது கனமழை பெய்ததால் பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

    பாலமேடு ஜல்லிகட்டு காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 600 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் காளையர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 18 காளைகளை தழுவிய கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
    பிரபாகரன் என்பவர் 2-வது இடத்தையும், மேட்டுப்பட்டி கார்த்தி என்ற வீரர் 3-வது இடத்தையும் பிடித்தார். மேலும் மதுரை மாவட்டம் பாலமேடு யாதவ சமுதாய கோயில் காளைக்கு முதல் பரிசாக காங்கேயம் பசு வழங்கப்பட்டது.

    மேலும் இரண்டாம் இடம் பிடித்த வீரருக்கு ஒரு சவரன் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த கார்த்தி அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

     
    Published by:Vijay R
    First published: