ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் - நோயாளிகள் அவதி

மானாமதுரையில் டாக்டர்கள் போராட்டம்

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 • Share this:
  ஆயுர்வேத மருத்துவர்களும் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்தாலும் அலோபதி மருத்துவர்களைக் கொண்ட இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதிலும் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது.

  இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவசர சிகிச்சைக்கு மட்டும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் அங்கு உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

  திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 700 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு, மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

  Also read: நாகையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது.. ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்..

  ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்ததில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சி.என்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலப்பு மருத்துவ முறை அமலுக்கு வந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: