ஜல்லிக்கட்டுக்கு குழு - எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஜல்லிக்கட்டுக்கு குழு - எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு!
ஜல்லிக்கட்டு
  • Share this:
ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து போட்டிகளை நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவுனியாபுரத்தில் நாளையும் பாலமேட்டில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அமைத்திருக்கும் கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமூதாயத்தைச் சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த ஒருங்கிணைப்பு, அறிவுரை என இரண்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குழு நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தும். அதன்படி ஒருங்கிணைப்பு குழு தலைவராக நீதிபதி மாணிக்கம் நியமிக்கப்படுகிறார்.


உறுப்பினர்களாக மாவட்ட ஆட்சியர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவுரைக் குழுவில் அவனியாபுரத்தில் வசிக்கும் 16 பேர் உறுப்பினர்களாக நியமிக்கபடுகின்றனர். ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் தான் அறிவுரை குழு செயல்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு விழாவில் அறிவுரைக்குழு தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஜல்லிக்கட்டு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் போது வீடியோ பதிவு செய்து அதை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விதிமுறைகள் அனைத்தும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதிகள், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த 36 அறிவுரை குழு உறுப்பினர்களையும் நியமித்து உத்தரவிட்டனர்.இந்த நிலையில் ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து போட்டிகளை நடத்தக் கோரியும் ஏ.கே.கண்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்காக வருகிறது.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப்பில் தொடர் நேரலையாக காணலாம்



மேலும் படிக்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்புமா - காலம் பதில் சொல்லும் டி.ஆர்.பாலு பதில்
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்