அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய காத்திருக்கும் காளைகள் - தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய காத்திருக்கும் காளைகள் - தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாதிரிப் படம்

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பாய்வதற்கு காளைகள் காத்திருக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வாடிவாசல் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் மாடம் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காளைகள் களத்தில் நின்று விளையாடும் இடங்களில் மஞ்சி-களைக் கொட்டி நிரப்பியுள்ளனர்.
  போட்டி நடைபெறும் இடத்தை சுற்றி ஆங்காங்கே குடிநீர், நடமாடும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பார்வையிட உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரத்தை தொடர்ந்து 15ம் தேதி பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.

  இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், காளைகளின் உரிமையாளர்கள் நள்ளிரவு 2 மணி முதலே காளைகளுடன் காத்திருக்கின்றனர். காலை 4 மணி முதல்தான் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது. இரவு தொடர்ந்து மழை பெய்தாலும், மழையில் நனைந்துகொண்டே உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். வழக்கமாக காளைகளுடன் 5 பேர் வரை வருவார்கள். ஆனால், இந்தமுறை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிகையாக ஒரு காளையுடன் இருவர் மட்டுமே வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதனால், காளைகளுடன் இரண்டு பேர் மட்டுமே வந்தனர். இரண்டு பேர் மட்டுமே இருப்பது காளையை வாடிவாசலில் விடுவதில் சிரமமாக இருக்கும் என்று காளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். காளைகளுக்கு உரிய சோதனைகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் காந்தி பார்வையிடவுள்ளதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார், 1,500 போலீசர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்மண்டல IG முருகன் மற்றும் மதுரை சரக DIG ராஜேந்திரன் மற்றும்
  மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: