சாத்தான்குளம்... எட்டயபுரம்...அடுத்து தென்காசியா? போலீசாருக்கு எதிராக அடுத்த பகீர் புகார்

காவல்துறையின் கடும் சித்ரவதையால் சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளாத நிலையில், காவல்துறையால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Share this:
தூத்துக்குடியில் தந்தை மகனை போலீசார் கொடூரமாகத் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. எட்டயபுரத்தில் மது அருந்தி விட்டு வாகனத்தில் சென்ற நபரை போலீசார் காரணமின்றி சரமாரியாகத் தாக்கியதால், அவமானமடைந்தவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பகீர் புகார் எழுந்தது.

இந்நிலையில் தென்மாவட்ட போலீசாருக்கு எதிராக மீண்டும் ஒரு பகீர் புகார் எழுந்துள்ளது. போலீசார் தாக்குதலில் காயமடைந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்புக்கு போலீசார் தான் காரணம் என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்படும் என்கின்றனர் போலீசார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகன் 25 வயதான குமரேசன் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில் மே 8 ஆம் தேதி குமரேசனை வீ.கே.புதூர் காவல்நிலையத்திற்கு போலீசார் வரவழைத்துள்ளனர்.


அங்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அறைந்து கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது. மீண்டும் மே 10 ஆம் தேதி அன்று வீ.கே.புதூர் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு குமரேசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

குமரேசனும் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வீ.கே.புதூர் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்ற காவலரும் சேர்ந்து மிக கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. பூட்ஸ் காலால் வயிறு, முதுகு பகுதியில் மிதித்ததாகவும், இரு கால்களையும் நீட்டச் சொல்லி அதன் மீது இருவரும் பூட்ஸ் காலால் ஏறி நின்றதாகவும் கூறப்படுகிறது.

முதுகில் கையால் மாறி மாறி குத்தியதாகவும், லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் பொய் கேஸ் போட்டுவிடுவோம் என மிரட்டியதாகவும், குமரேசன் தந்தையையும் அடிப்போம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.இந்நிலையில், ஜூன் 10 ஆம் தேதி குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சுரண்டையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கிருந்து ஜூன் 12 ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அரசு மருத்துவர் கேட்ட பிறகு தான், குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை சொல்லி உள்ளார்.

கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குமரேசனின் தந்தையிடம் மருத்துவர் கூறியுள்ளார். இதை அடுத்து தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆய்வாளர் தகுதியில் உள்ள ஒரு காவல் அதிகாரியை எஸ்.பி. நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 16 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குமரேசன் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்களா, குமரேசன் மரணத்திற்கு போலீஸ் தாக்குதல்தான் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் ஆகியோர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குமரேசன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வீ.கே.புதூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசார் தாக்குதலால் உயிரிழந்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் உறவினர்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

காவல்துறையின் கடும் சித்ரவதையால் சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading