நெல்லையில் கடன் தவணை நெருக்கடியால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

Youtube Video

நெல்லையில், சரக்கு வாகனத்திற்கு தவணையை மூன்று மாதம் கட்ட தவறியதால் , நிதி நிறுவனத்தினர் வாகனத்தைப் பறிமுதல் செய்து அவதூராக திட்டியதால், வாகன உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்தவர் 37 வயது பழனிவேல். இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டிவந்தவர் 2019 ஆம் ஆண்டு சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி தொழில் தொடங்கியுள்ளார். ஆட்டோ வாங்க தனது மைத்துனர் அன்னாவி பெயரில், நெல்லை ஸ்ரீ புரத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் பழனிவேல். மாதம் 11,500 என்று பதினொருமாதம் கட்டியவர் கொரோன ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக தவணைத் தொகையை கட்டாமல் இருந்துள்ளார்.

  இதனால் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் தவணையை கட்டசொல்லி, பழனிவேலை தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர். பணம் கிடைத்ததும் பழைய பாக்கியையும் மீதம் உள்ள தொகையையும் சேர்த்துக் கட்டிவிடுவதாக தெரிவித்துவந்துள்ளார். ஆனால் அதை ஏற்காத ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், கடந்த வாரம் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

  இது தொடர்பாகத் தனியார் நிதி நிறுவனத்துக்குச் சென்று பேசிய பழனிவேலிடம், ஊழியர்கள் அவதுாறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. தொழிலுக்கு வைத்திருந்த லோடு ஆட்டோ பறிபோன சோகத்திலும், ஃபைனான்ஸ் ஊழியர்களின் பேச்சால் மிகுந்த மனவேதனையிலும் பழனிவேலு இருந்துள்ளார்.

  இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை காலை ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றவர் மீண்டும் ஆட்டோவை பற்றி கேட்டுள்ளார். அப்போதும் ஊழியர்கள் திட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதனால் விரக்தியடைந்த பழனிவேல், தான் கையோடு எடுத்துச் சென்றிருந்த மண்ணெண்ணையை ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வாசலில் நின்றே தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

  மேலும் படிக்க... தவறவிட்ட கைப்பையில் 30 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம்: உரியவரிடம் ஒப்படைத்த சலவை தொழிலாளிக்கு பாராட்டு

  உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயில் கதறித் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றுவந்த பழனிவேல் புதன்கிழமை காலை உயிரிழந்தார் . தனியார் ஃபைனான்ஸ் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால்தான் பழனிவேல் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஃபைனான்ஸ் நிறுவனத்தை முற்றிகையிட்டதால் பரபரப்பு ஏறப்பட்டது.

  உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். கடன் தொகை கட்டாததால் ஆடோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  -----------------------------------------------------------------------------------------------

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: