கிருமிநாசினி தெளிப்பதுபோல் வந்து ஏடிஎம்மில் ரூ.8.62 லட்சம் கொள்ளையடித்த பலே திருடன்... சென்னை அருகே பட்டப்பகலில் துணிகரம்

atm theft

இயந்திரத்திலிருந்து 13 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 • Share this:
  சென்னை மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நூதன முறையில் புகுந்து, இயந்திரத்திலிருந்து 13 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பது போல் பட்டப்பகலில் நூதன முறையில் ரூ.8.62 லட்சம் கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
  மிகச் சாதாரணமாக வரும் நபர்கள் திடீரென ஏ.டி.எம் கொள்ளையர்களாக மாறி, யாரும் எதிர்பாராத வகையில் பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகளை இதுபோன்ற சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், சென்னை அருகே அதுபோன்ற நிஜமான சம்பவம் நடந்துள்ளது.

  சென்னை மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
  ஞாயிறு பிற்பகலில் ஏடிஎம் மையத்தின் காவலாளி வெளியே அமர்ந்து கொண்டிருந்தார்; மையத்தின் உள்ளே வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்துக்கொண்டிருந்தார்.
  அச்சயமத்தில் ஆட்டோவில் பையுடன் வந்த மர்ம நபர் ஒருவர், மாநகராட்சியிலிருந்து வருவதாகவும், ஏ.டி.எம் மையத்திற்குள் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என காவலாளியிடம் கூறியுள்ளார்.
  கொரோனா தொற்று காலம் என்பதால், காவலாளியும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. முகக்கவசம் அணிந்திருந்த அந்த நபர், விறு விறுவென ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்துள்ளார்; அப்போது அந்த வாடிக்கையாளர் ஓரமாக நின்றுள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தில் சாவியை நுழைத்து பாதுகாப்பு வளையத்தை திறந்துள்ளார்.
  ரகசிய பாஸ்வேர்டை உள்ளீடு செய்து, பணம் அடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பகுதியை திறந்து அதிலிருந்த பணத்தை அள்ளி பையில் போட்டுவிட்டு சிட்டாக ஆட்டோவில் மறைந்தார். சம்பவத்தை பார்த்த வாடிக்கையாளர் தொடக்கத்தில் வந்தவர் வங்கி ஊழியர் என நினைத்தாகவும், ஆனால் பணத்துடன் ஓடிவிட்டார் என அவர் காவலாளியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த காவலாளி, வங்கி மேலாளர் மூலம் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

  கொள்ளையன், சாவி, ரகசிய பாஸ்வேர்டு பயன்படுத்தியதால், ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் அல்லது வங்கி ஊழியர்கள் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களின் பட்டியலை தயாரித்து அதில், ஒவ்வொருவரையாக அழைத்து விசாரணை நடத்திவருகிறார்கள் மதுரவாயல் போலீசார்.
  காவலாளி மிக அஜாக்கிரதையாக செயல்பட்டாரா? இல்லை அவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்துவருகிறார்கள். தொடக்கத்தில், 13 லட்ச ரூபாய் கொள்ளை என்று கூறப்பட்ட நிலையில், ஆய்வு செய்து பார்த்ததில் ரூ.8.62 லட்சம் மட்டுமே கொள்ளை போயுள்ளது தெரியவந்துள்ளது

  கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என யாராவது வந்தால், அடையாள அட்டையை காட்டச் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ள போலீசார், பணம் சம்பந்தப்பட்ட இடங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களை எச்சரித்துள்ளனர்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Gunavathy
  First published: