Home /News /tamil-nadu /

உங்கள் தொகுதி: எடப்பாடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி: எடப்பாடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

முதலமைச்சர் பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியைத்தான் இன்றைய உங்கள் தொகுதி... அறிந்ததும்... அறியாததும்.. தொகுப்பில் பார்க்கப்போகிறோம்...

  சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று எடப்பாடி. முதலமைச்சரின் தொகுதி என்பதே இதன் சமகால அரசியல் அடையாளம்... சிலுவம்பாளையம்தான் முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊர்... பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்த தொகுதியில் உள்ள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்.

  மேட்டூரில் இருந்து பவானி செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் வயல்கள், நீர்நிலைகளால் எப்போதும் பசுமையாக காணப்படுகிறது. தென்னை, வாழை, நெல்லுடன் புகையிலை விவசாயமும் நடைபெறும் தொகுதி இது... வாரத்துக்கு ஐந்து நாட்களுக்கு 2 கோடி ரூபாய் வரை பருத்தி விற்பனை நடைபெறும் கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 89 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது.

  தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பருத்தி விவசாயிகளும், வியாபாரிகளும் இங்கேதான் குவிகிறார்கள். நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலம் புடவைகள், துண்டுகள் நெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

  இருப்பாளி, வனவாசி உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சும் தொழில் செய்கிறார்கள். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பூலாம்படி காவிரி தடுப்பணையில் படகு சவாரி பிரசித்தம் பெற்றது. எடப்பாடியை அதிமுகவின் எஃகு கோட்டை என வர்ணிக்கும் முதலமைச்சர் பழனிசாமி இந்த தொகுதியில் இருந்துதான் 4 முறை எம்எல்ஏவாக தேர்வானார். 1996 மற்றும் 2006இல் இதே தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி: உலக பிரபலமான 2009 இடைத்தேர்தல்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதி - திருமங்கலம் தொகுதியை அறிவோம்

  எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வென்றிருக்கிறது. பாமக 3 முறையும், திமுகவும், காங்கிரசும் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியில் அப்போது எம்எல்ஏவாக இருந்த பழனிசாமியே மீண்டும் களம் இறக்கப்பட்டார். 98,703 வாக்குகள் பெற்ற அவர், பாமக வேட்பாளர் அண்ணாதுரையை விட 42,022 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

  மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்போது பாதுகாப்பு கருதி பூலாம்பட்டி - நெரிஞ்சிப்பேட்டை இடையே படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் 10 கிராம மக்கள் தவிக்க வேண்டியுள்ளது. அதற்கு தீர்வாக காவிரியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தலைவாசலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு நீர் கொண்டு செல்ல விளைநிலங்கள் மற்றும் சாலைகளின் குறுக்கே பள்ளம் தோண்ட பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் விளைநிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் அமைப்பதும் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது... ஆனாலும் முதலமைச்சரின் தொகுதி என்ற பெருமையுடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார்கள் வாக்காளர்கள்.

   

  முதல்வர் பழனிசாமி சொந்த தொகுதியில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு அதிகம் இருப்பதால் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என பார்க்கலாம்...  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CM Edappadi Palaniswami, Salem, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி