தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு

மாதிரி படம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அசாமில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நேற்று நடந்தது.

  தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். சைக்கிளில் வந்த விஜய், ரசிகரின் செல்போனை பறித்த அஜித், நடந்து வந்து வாக்குப்பதிவு செய்த விக்ரம், காத்திருந்து வாக்களித்த சூர்யா, கார்த்திக், சிவக்குமார் என சினிமா நட்சத்திரங்கள் வைரலாகினர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

  இந்தநிலையில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் பெத்துசெட்டிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

  இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடந்துமுடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்குப்பதிவு விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52% வாக்குகளும், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது.

  மேலும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அங்கு 81 . 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு காலை தொடங்கிய நிலையில், ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களிக்க வந்தனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி 21 வது வாக்குச்சாவடி மற்றும் தட்டாஞ்சாவடி, ஊசுடு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: