காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பது தமிழக தேர்தல் களத்தில் கட்சி பாகுபாடின்றி தவறாமல் ஒலிக்கும் முழக்கம்... அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சியைக் கொடுத்த எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர்... 1967ம் ஆண்டு காமராஜரைத் தோற்கடித்து திமுகவின் பெ.சீனிவாசனை எம்எல்ஏவாக்கியதும் இந்த தொகுதிதான்... தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் சொந்த ஊரும் கூட... விருது பட்டியாக இருந்து காலப்போக்கில் விருதுநகராக வளர்ந்த இங்கேதான், பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பருப்பு, எண்ணெய் உற்பத்தியில் 80 விழுக்காட்டை பூர்த்தி செய்யும் வணிக நகரம் என்பதால்தான் அப்படி ஒரு அங்கீகாரம். ஆங்கிலேயருக்கு நிகராக கல்வி கற்க 1885இல் வீட்டிற்கு ஒரு பிடி அரிசி வாங்கி அதை விற்ற காசில் அமைக்கப்பட்ட கல்விக் கூடம் இன்று கே.பி.எஸ் பள்ளிகளாக நூற்றாண்டு கடந்து இந்த ஊர்க்காரர்களின் பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமைக்கும் சொந்தமானது விருதுநகர்.
இங்கே எண்ணெய் குளியல் போடும் புரோட்டாவின் ருசிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக கவுசிகா நதி ஓட, 50 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் விளைகிறது. கரிசல் பூமிக்கே உண்டான பருத்தி மற்றும் எண்ணெய் வித்துகளும் பயிரிடப்படுகின்றன.
விருதுநகரில் 13 முறை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் 7 கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக திமுக 4 முறையும், அதிமுக, காங்கிரஸ் ஆகியவை தலா 2 முறையும் வென்றுள்ளன. அதிலும் அதிமுக இங்கே 40 ஆண்டுகளாக வெற்றி பெற்றதில்லை.
2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கலாநிதியை 2,870 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக பணிகள் நடந்தாலும் இன்னும் மாதத்தில் 2 நாட்களே குடிநீர் கிடைப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளான பின்பும் ஊருக்கு நடுவே உள்ள பழைய பேருந்து நிலையமே பிரதானமாக பயன்படுத்தப்படுவதால் பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க...
உங்கள் தொகுதி : 25 ஆண்டுகளாக திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் திருவாரூர்
வேலாயுத ஊரணியை தூர்வாரினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற கோரிக்கையும் கவனிப்பார் இன்றி கிடக்கிறது. ஆனாலும் வாக்கு இயந்திரத்தின் பொத்தானை அழுத்த காத்திருக்கிறார்கள் மக்கள்.
நான்கு தேர்தல்கள் தவிர்த்து மற்ற தேர்தல்களில் இங்கே வென்ற எந்த கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில்லை. அந்த நம்பிக்கையை இந்த தேர்தல் உடைக்குமா என பார்க்கலாம்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்