விலங்குகளை வேட்டையாடி அதன் கறி, தோல், கொம்புகளை பாடம் செய்து விற்கும் சந்தையாக இருந்ததால் வேடன் சந்தையூர் என பெயர் பெற்று பிற்காலத்தில் அதுவே வேடசந்தூராக மருவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் பேரைச் சொன்னாலே, இலவச மின்சாரம் கேட்டு போராடியதால் 1978ம் ஆண்டு ஆத்துமேட்டில் நாச்சிமுத்துக் கவுண்டர், சுப்பிரமணி சின்னச்சாமி, கருப்பசாமி உள்ளிட்ட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுதான் நினைவுக்கு வரும். வேடசந்தூருக்குள் நுழையும்போதே அவர்களின் நினைவுத்தூண்தான் நம்மை வரவேற்கும்.
கொடைக்கானல் கீழ் மலையில் உற்பத்தியாகி வேடசந்தூருக்குள் பாய்ந்தோடும் குடகனாறும், அது நின்று களைப்பாறும் அழகாபுரி அணைக்கட்டுமே பாசனத்தின் ஆதாரம். அதிக அளவாக 938 ஏக்கரில் வெங்காயமும், 375 ஏக்கரில் தக்காளியும், 674 ஏக்கரில் முருங்கையும் பயிர் செய்யப்படுகின்றன.
சுருட்டுக்கு பெயர் பெற்ற நகரமாக திண்டுக்கல் திகழ்ந்தபோது அதற்கான புகையிலை வேடசந்தூர் பகுதிகளில்தான் விளைந்தது. அதனால்தான் நாடு சுதந்திரம் அடைந்ததும் 1948ல் மத்திய அரசு புகையிலை ஆராய்ச்சி மையத்தை இங்கே தொடங்கியது. புகையிலைக்கு தடை விதிக்கப்பட்ட பின், புகையிலை பயிரிடப்படும் பரப்பளவு 6 ஆயிரம் ஏக்கரில் இருந்து 1,500 ஏக்கராக குறைந்துவிட்டது.
வறட்சி மிகுந்த தாலுகாவாக உள்ளதால் அரசின் மானியத்துடன் 250க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இந்த தொகுதியில் செயல்படுகின்றன. அதில் பணியாற்றக் கூடிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் அளவு 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சிமெண்ட் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெட்டி எடுக்கும் குவாரிகளும் இந்த தொகுதியில் அதிகமாக உண்டு.
வேடசந்தூரில் அதிகபட்சமாக அதிமுக 7 முறையும், திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறை வாகை சூடியுள்ளன.
இதே தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றவரும், துணை சபாநாயகராக இருந்தவருமான வி.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் வி.பி.பி.பரமசிவம் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். வி.பி.பி. பரமசிவம் 97,555 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவசக்திவேல் 77,617 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றார்.
மேலும் படிக்க...
உங்கள் தொகுதி: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்
புகையிலை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 1977ஆம் ஆண்டு அழகாபுரி அணை உடைந்த பின்பு தூர்வாரப்படாததால் பல குளங்களுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தக்காளி அதிகமாக விளையும் அய்யலூர், கூம்பூரில் குளிர்பதனக் கிடங்கும், பழச்சாறு ஆலையும் தேவை என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது...
1980 களில் வேடசந்தூரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற அதிமுக வரும் தேர்தலில் வென்றால் மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும்... வெற்றி கிட்டுமா...
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்