திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெறும்பூர்.... காவிரி ஆறும், உய்ய கொண்டான், மேட்டு கட்டளை வாய்க்கால்களும் வளம் கொழிக்க வைக்கும் இங்கே 20 ஆயிரம் ஏக்கரில் நெல் விளைகிறது. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவத் தலமான எறும்பீஸ்வரர் ஆலயத்தால் திருவெறும்பூர் என பெயர் பெற்ற ஊர் இது... திருச்சி தொழில் வளர்ச்சியின் அடையாளங்களாக விளங்கும் பெல் எனப்படும் பாரத மிகு மின் நிறுவனம், பாதுகாப்புத்துறையின் படைக்கலத் தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே பணிமனைகள் இந்த தொகுயில்தான் அமைந்திருக்கின்றன. பல்லாயிரம் பேருக்கு வேலை தரும் இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, இவற்றை நம்பி செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற சூரியூர் இங்கேதான் இருக்கிறது. நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா, துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகமும் இங்கே அமைந்திருக்கின்றன. இது திமுகவின் கோட்டை. அந்த கட்சி 6 முறையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.
2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் களம் கண்ட, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 16,695 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு 85,950 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் கலைச்செல்வன் 69,255 வாக்குகள் பெற்றார். தொகுதியில் மொத்தம் 2,91,891 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 1,48,609. ஆண்கள் 1,43,229. திருநங்கைகள் 53.
பெல் சார்ந்த 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த ஆலைகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உரக்க ஒலிக்கிறது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்கிறார்கள் வாக்காளர்கள். திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் - துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைப்பதால் நெடுஞ்சாலை பயன்பாட்டில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க.... உங்கள் தொகுதி: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்
ஒரு காலத்தில் திருச்சியின் புறநகரா இருந்த அரியமங்கலம் இன்று நகரின் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில் குப்பைக் கிடங்கு துர்நாற்றம் மற்றும் புகையால் மக்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதனால் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. குறைகள் பல இருந்தாலும் ஆள்காட்டி விரலில் மை வைக்க திருவெறும்பூர் மக்கள் தயாராகிவிட்டனர்.
திருவெறும்பூர் கோட்டையில் மீண்டும் திமுக கொடி பறக்குமா... பொறுத்திருந்து பார்ப்போம்.....
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly Election 2021, Trichy