Home /News /tamil-nadu /

உங்கள் தொகுதி: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

உங்கள் தொகுதி... அறிந்ததும்.. அறியாததும் தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போகும் சட்டமன்றத் தொகுதி புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான திருவண்ணாமலை...

  பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் கருதப்படும் அண்ணாமலையார் கோயிலே திருவண்ணாமலையின் அடையாளம்.. 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப விழாவைக் காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிவார்கள்... 2,668 அடி உயர மலையையே சிவனாக நினைத்து, சித்ரா பவுர்ணமியில் தோராயமாக 15 லட்சம் பேர் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்... ரமண மகரிஷி, சேஷாத்ரி, விசிறி சாமியார் என இங்கே வாழ்ந்து மறைந்த பலரின் ஆசிரமங்கள் கிரிவலப்பாதையில்தான் அமைந்திருக்கின்றன.

  50க்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் பக்தர்கள் கூட்டத்தை எப்போதும் காணலாம். ஆறுகளே இல்லாத இந்த தொகுதியில் விளைநிலங்கள் பெரும்பாலும் கிணற்றுப் பாசனத்தையும், ஏரி பாசனத்தையுமே நம்பியுள்ளன. 8 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பும், 5 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்தும், 3,500 ஹெக்டேரில் நிலக்கடலையும் விளைகின்றன. பக்தர்களை நம்பி ஏராளமான கடைகளும் திருவண்ணாமலை நகரத்தில் உண்டு.

  திமுகவின் கோட்டை திருவண்ணாமலை. 8 முறை இங்கே வென்றுள்ள திமுகவை, கடந்த 29 ஆண்டுகளாக யாரும் வென்றதில்லை. அக்கட்சியின் கே.பிச்சாண்டி 4 முறை வென்றுள்ளார். காங்கிரஸ் 6 முறை வென்றுள்ள நிலையில் அதிமுக இதுவரை வெற்றி பெற்றதில்லை.

  எம்எல்ஏவாக இருந்த எ.வ.வேலுவை 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் களம் இறக்கியது. அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பெருமாள் நகர் ராஜன் போட்டியிட்டார். அவரை எ.வ.வேலு 50,378 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

  தற்போது நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 851 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 37,856 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 46 956 பேர் பெண்கள்.

  லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 16 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால் திட்டம் இதுவரை கைகூடவில்லை. வெளியூர் பக்தர்கள் தங்க வசதியாக ஈசான்ய லிங்கம் அருகே 28 கோடி ரூபாயில் 123 அறைகளுடன் கட்டி திறக்கப்பட்ட யாத்ரி நிவாஸில் இன்னும் பூட்டுதான் தொங்கிக்கொண்டிருக்கிறது.

  1985ல் டான்காப் மூலம் தொடங்கப்பட்ட கடலை எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் சிறப்பாக செயல்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டது. அது மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளாக திருவண்ணாமலை வாக்காளர்களின் குரலாக இருந்து வருகிறது.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  ஆன்மிக நகரத்தில் தொடர்ந்து ஆறாம் முறையாக திமுக வெல்லுமா.. வெற்றி பெறாத தொகுதி என்ற களங்கத்தை அதிமுக துடைக்குமா... பொறுத்திருந்து பார்க்கலாம்....

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Thiruvannamalai, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி