உங்கள் தொகுதி: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

உங்கள் தொகுதி அறிந்ததும்... அறியாததும்... தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போகும் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் வடக்கு.. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பின்னலாடை நகரத்தை வலம் வரலாமா....

 • Share this:
  பனியன் தொழிலில் உலக அளவில் பிரபலமான நகரம் திருப்பூர்... இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 60 விழுக்காடும், ஆயத்த ஆடைகளில் 28 விழுக்காடும் திருப்பூரில் தயாராவதால் டாலர் சிட்டி என பெருமையோடு அழைக்கப்படுகிறது. திருப்பூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு இரு தேர்தல்கள் நடந்துவிட்டன. திருப்பூர் வடக்கு தொகுதியில் குமார் நகர் தொடங்கி சுமார் 5,000 பின்னலாடை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 20000 கோடி ரூபாய்க்கு உள்நாடு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

  இதோடு அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்திக் கழகமும் இந்திய அளவில் பெயர் பெற்றது... இங்கு தயாராகும் பித்தளை, எவர்சில்வர், செம்பு பாத்திரங்கள் மற்றும் ஐம்பொன் பூஜை பொருட்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் பெரும் வரவேற்பு உண்டு. ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் பாத்திரத் தொழிலில் 3000 குடும்பத்தினர் பணியாற்றுகிறார்கள்.

  பெருமாநல்லூர், தரவலூரில் விவசாயமும் உண்டு. 1970ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது 3 விவசாயிகள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டதன் நினைவுச்சின்னம் பெருமாநல்லூரில் இன்றும் வரலாறு பேசிக் கொண்டிருக்கிறது.

  திருப்பூர் சட்டமன்றத் தொகுதி இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

  திருப்பூர் வடக்கு தொகுதி தனியாக பிரிக்கப்பட்ட பின் இரு தேர்தல்கள் நடந்துள்ளன. இரண்டிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் விஜயகுமார் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சாமிநாதன் போட்டியிட்டார். அதில் விஜயகுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாமிநாதன் 68 ஆயிரத்து 943 வாக்குகள் பெற்று தோற்றார்.

  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வசிக்கும் இந்த தொகுதியில் 110 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 1,750 வீடுகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. 2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தொழிலாளர்களுக்கு புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் தற்போது வரை அதற்கான பணிகள் தொடங்கப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  பாதாளச்சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதமாகி வருகின்றன. இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் இந்த தொகுதி மக்கள் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  திருப்பூர் வடக்கில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறுமா.... எப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்கும் திமுக இந்த முறை என்ன செய்யப் போகிறது... இந்த கேள்விகளுக்கு விடை காண பொருத்திருப்போம்...  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: