Home » News » Tamil-nadu » ASSEMBLY ELECTION 2021 SULUR CONSTITUENCY VAI

உங்கள் தொகுதி: சூலூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

இது உங்கள் தொகுதி... அறிந்ததும்.. அறியாததும்... தமிழக சட்டமன்றத் தொகுதிகள் பற்றிய துல்லியமான அறிமுகத்தை தரும் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போவது கோயம்புத்தூரை ஒட்டி அமைந்துள்ள சூலூர் தொகுதி.

  • Share this:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சூலூர். கிராமமும், கிராமம் சார்ந்த பகுதிகளும்தான் இதன் அடையாளம். விவசாயமும், விசைத்தறியும் இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரம். சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது ஒலிக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை நம்பியே 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

நொய்யல் ஆற்றின் கரையில் தலை வைத்திருக்கும் இந்த தொகுதியை, வார்ப்படத் தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், இயந்திர உதிரிபாக தயாரிப்பு ஆலைகளோடு கொடிசியா ராணுவ தொழிற்பூங்காவும் சேர்ந்து தமிழகத்தின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியிருக்கின்றன. விரிந்து பரந்த பெரியகுளத்தால் நிலத்தடி நீர்மட்டம் சரியாத தொகுதி இது. இங்குள்ள படகுகுழாம் நல்லதொரு பொழுதுபோக்குமிடம்... ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு கொண்ட மிகவும் தொன்மையான பகுதி இது.

தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலின்போது திருப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இடம்பெற்றது சூலூர். அதற்கு பிந்தைய இரு தேர்தல்களில் சூலூர் சட்டமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழந்தையம்மாள் இருமுறையும் வெற்றி பெற்றார். பின்னர் பல்லடம் தொகுதியுடன் இணைக்கப்பட்ட சூலூர் 2011இல் மறுசீரமைப்பின்போது மீண்டும் சட்டமன்றத் தொகுதியானது. அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த தியாகராஜன் வெற்றி பெற்றார்.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் கனகராஜ் மரணமடைய 2019ம் ஆண்டு மே மாதம் இடைத்தேர்தல் நடந்தது. அதில் கனகராஜின் சித்தப்பா மகனான கந்தசாமி 10,113 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை தோற்கடித்தார்.

மேலும் படிக்க...நாமக்கல் சட்டமன்றத் தொகுதியின் சிறப்புகளும் அதன் முக்கியத்துவமும்..

தேர்தல் தவறாமல் கட்சிகளின் வாக்குறுதியில் இடம்பிடிக்கும் ஜவுளிப் பூங்கா இந்த முறையாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு... கணியூர் சுங்கச்சாவடிக்கு அருகே கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஊரை விட்டு வெளியேறினாலே சுங்கக்கட்டணம் கட்டும் பிரச்னை பாஸ்டேக் கட்டாயம் என்ற அறிவிப்பால் இன்னும் தீர்ந்தபாடில்லை. மின்கோபுரம் அமைக்கப்படும் விளைநிலங்களுக்கு இழப்பீடு கிடைப்பது தாமதமாவதால் விரக்தியில் இருக்கின்றனர் விவசாயிகள். கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட பேருந்துகள், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் பல கிராமங்களுக்கு செல்லாததால் மக்கள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

அதிமுகவும், அதன் கூட்டணியும் சேர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் திமுக முதல்முறையாக கால் பதிக்குமா... அல்லது அதிமுகவே தக்கவைத்துக் கொள்ளுமா  என பொறுத்திருந்து பார்ப்போம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 8, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading