உங்கள் தொகுதி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

இது உங்கள் தொகுதி... அறிந்ததும்.. அறியாததும்... தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் சிறப்புகளை படம்பிடித்துக் காட்டும் தொகுப்பு.. நாம் பார்க்கப்போகும் தொகுதி ஜெயலலிதா களம் கண்ட ஸ்ரீரங்கம்.

  • Share this:
    தென்திசையில் காவிரியும்... வடதிசையில் கொள்ளிடமும் தழுவிக்கொண்டோட நடுநாயகமாய் வீற்றிருக்கிறது ஸ்ரீரங்கம்... 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மிகப்பெரிய கோயிலான ரங்கநாதர் ஆலயம் இந்த ஊரின் அடையாளம் மட்டுமல்ல தொகுதியின் அடையாளமும் கூட... பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தொகுதி நெல் விளையும் பூமி... 6,400 ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் நடக்கிறது. 1,518 ஹெக்டேர் பரப்பளவில் வாழையும், 432 ஹெக்டேர் பரப்பளவில் பூக்களும் விளைகின்றன.

    முக்கொம்பு சுற்றுலாத் தலம் இப்பகுதி மக்களிடையே பிரசித்தம் பெற்றது. ஸ்ரீரங்கம் மேலூரில் 25 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்கா ஆசியாவிலேயே மிகப் பெரியது. குழுமணியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், நாவல்பட்டி தேசிய சட்டப் பள்ளி, மொண்டிபட்டி டிஎன்பிஎல் காகித ஆலை என ஸ்ரீரங்கம் தொகுதியில் அடையாளச் சின்னங்கள் ஏராளம்...

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுதான் முதலமைச்சரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் 2014இல் ஜெயலலிதா எம்எல்ஏ பதவியை இழந்தார்.

    அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த தொகுதி அந்தக் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. 9 முறை இங்கே வாகை சூடியுள்ள அதிமுக 2 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதேநேரம் ஒருமுறை மட்டுமே வென்றுள்ள திமுக 7 முறை தோற்றுள்ளது.

     

    ஜெயலலிதா இறந்த பின் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார் வளர்மதி. 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் இதே தொகுதியில் களம் கண்ட வளர்மதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பழனியாண்டியை விட 14,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

    மேலும் படிக்க...உங்கள் தொகுதி: சிவகாசி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

    பல தலைமுறைகளாக ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி வாழும் பல்லாயிரம் குடும்பங்களுக்கு அடிமனை பட்டா இல்லாததே இந்த தொகுதியின் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அடிமனை பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அப்போதைய எம்எல்ஏ ஜெயலலிதா வாக்கு கொடுத்தார். ஆனால் அரசு இன்னும் தீர்வு காணவில்லை. அதிமுகவின் ஸ்ரீரங்கம் கோட்டையில் கொடி தொடர்ந்து பறக்குமா... விடை அறிய தேர்தல் வரை காத்திருப்போம்...



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: