உங்கள் தொகுதி: சிவகாசி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

234 சட்டமன்றத் தொகுதிகளையும் வலம் வரும் ‘உங்கள் தொகுதி...’ அறிந்ததும் அறியாததும்.. தொகுப்பு இது... பட்டாசுகளின் நகரமான சிவகாசி சட்டமன்ற தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

  • Share this:
    தென்மதுரையை ஆண்ட ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து வழிபட்டதால் சிவகாசி என பெயர் பெற்ற நகரம் இது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, குட்டி ஜப்பான் என புகழும் அளவிற்கு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொழில் நகரமாக நாடு முழுமைக்கும் அறிமுகமான ஊர். நகரத்திற்குள்ளும் சுற்றுவட்டார கிராமங்களிலும் திரும்பும் திசையெல்லாம் கந்தக பூமியில் விளைந்து நிற்கின்றன பட்டாசு ஆலைகள்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் நேரடியாக 7 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் பணியாற்றும் இந்த ஊரில் வேலையில்லை என்ற குரலே கேட்பதில்லை. ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய்க்கு நடக்கிறது பட்டாசு வர்த்தகம். வேறு எங்கும் இல்லாத வகையில் தீபாவளி, பங்குனி பொங்கல் என ஆண்டுக்கு இருமுறை தலா 3 மாத ஊதியம் போனஸாக வழங்கி சிறப்பிக்கின்றன பட்டாசு ஆலைகள்.

    அதற்கு அடுத்தபடியாக காலண்டர், நோட்டுப் புத்தகம், பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் பைண்டிங் பணியும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கின்றன. ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் புரளும் தொழில் இது. மானாவரி நிலங்கள் அதிகமாக காணப்படும் சிவகாசி தொகுதியில் மக்காச்சோளம் பயிரிடவே விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது சிவகாசி தொகுதி. அதில் அதிக அளவாக அதிமுக 5 முறை வென்றிருக்கிறது. 58 ஆண்டுகளாக காங்கிரசும், 31 ஆண்டுகளாக திமுகவும் வெற்றியை சுவைத்ததில்லை... மூப்பனார் இருந்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே வெற்றி பெற்றிருக்கிறது.

    கடந்த இரு தேர்தல்களிலும் இங்கே வாகை சூடிய தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 10 ஆண்டுகளாக அமைச்சராகவும் இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் ராஜா சொக்கரை 11,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இரட்டை நகரங்களாய் இருக்கும் சிவகாசி, திருத்தங்கல் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது 15 ஆண்டுகாலக் கனவு.... அடுத்து, 16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் சிவகாசியின் தாகத்தை தணிக்கவில்லை. ஆனாலும் பட்டாசு தொழிலாளர்களுக்கு தனியாக நல வாரியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த தொகுதி மக்களின் மனதில் பால் வார்த்துள்ளது. அந்த மகிழ்ச்சியுடன் தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்..



    ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா கால பாதிப்பு ஆகியவற்றால் இன்னலைச் சந்தித்துள்ள பட்டாசு நகரத்தில் தொழிலாளர்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: