• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • உங்கள் தொகுதி: 30 ஆண்டு காலம் அ.தி.மு.கவே வெற்றி - சங்கரன்கோயில் அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: 30 ஆண்டு காலம் அ.தி.மு.கவே வெற்றி - சங்கரன்கோயில் அறிந்ததும் அறியாததும்

Youtube Video

தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிமுக வெற்றிக் கொடி நாட்டி வரும் தொகுதி எது என்று தெரியுமா... இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பைப் பாருங்கள்...

 • Share this:
  சங்கர நாராயணர் கோயில் அமைந்திருப்பதால் சங்கரன்கோவில் என பெயர் பெற்ற ஊர்... சங்கரலிங்க சுவாமியும், கோமதி அம்மனும் வீற்றிருக்கும் இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உக்கிர பாண்டியனால் கட்டப்பட்டது. ஆடித்தபசு நாளில் பல்லாயிரம் பக்தர்கள் திரளும் இந்த கோயிலில் ஆடு, கோழி, உப்பு, மிளகு உள்ளிட்டவற்றுடன் வெள்ளியால் செய்யப்பட்ட பாம்பு, தேள் உருவமும் நேர்த்திக் கடனை ஒட்டி பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும். மழை மறைவு பிரதேசமான இங்கே பெரிய ஆறுகள் ஏதும் இல்லாததால் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. 30,000 ஏக்கரில் விவசாயம் நடந்தாலும் அதில் 25 விழுக்காடு மலர்கள்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. 10 விழுக்காடு நிலங்களில் எழுமிச்சை விளைகிறது. கரும்பு, நெல் உள்ளிட்டவையும் பயிரிடப்படும் நிலையில் 50,000 பேர் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர்.

  அதற்கு அடுத்தபடியாக நெசவே மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக இருக்கிறது. 4,000 விசைத்தறிக் கூடங்கள் 30,000 குடும்பங்களுக்கு பணி வழங்குகின்றன. வெள்ளாட்டு பிரியாணிக்கு புகழ்பெற்ற சங்கரன்கோயிலில் சுல்தான் பிரியாணி கடையும், சிவகாசி நாடார் மெஸ்சும் அந்த பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் இங்குள்ள கோமதி முத்துபுரத்தில்தான் பிறந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியும் இந்த தொகுதியில்தான் இருக்கிறது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருமுறை இடம்பெற்ற சி.கருப்பசாமி இந்த தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை வென்ற பெருமைக்கு உரியவர்.

  சங்கரன்கோயில் அ.தி.மு.கவின் கோட்டையாகவே தொடர்ந்து வருகிறது. அ.தி.மு.க இங்கு 9 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக தவிர்த்து வேறு கட்சி இங்கே வென்றதில்லை. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

  2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.எம்.ராஜலட்சுமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அன்புமணி கணேசனை விட 14,489 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வி.எம்.ராஜலட்சுமிக்கு 78,751 வாக்குகளும், அன்புமணிக்கு 64,262 வாக்குகளும் கிடைத்தன.

  சங்கரன்கோவில் தொகுதியில் 2,52,939 வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண்கள் 1,30,195 பேர் ஆண்கள் 1,22,739 பேர். திருநங்கைகள் 5 பேர்.

  2012ம் ஆண்டு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மேலநீலித நல்லூரில் சிப்காட் அமையும் என அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆனபோதும் ஒரு தொழிற்சாலை கூட அமையவில்லை. தாமிரபரணி ஆற்றில் இருந்து மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும் 15 நாட்களுக்கு ஒருமுறையே நீர் கிடைப்பதால் தாகத்தில் தவிக்கிறார்கள் மக்கள்.

  விவசாயம் வளம் பெற மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பெண்பகவல்லி அணையை தூர் வாருவோம் என எல்லா தேர்தலிலும் கூறும் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலிலும் பேச்சு மாறாமல் அதே வாக்குறுதியை தருவார்கள் என எதிர்பார்க்கலாம். மல்லிகை, பிச்சி என அதிகமாக பூ விளையும் இந்த பூமியில் அதற்கான மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.

  மேலும் படிக்க... புதிய கூட்டணிக்கு முயற்சிக்கும் சரத்குமார்.. தனி அணிக்கு தயாராகும் தினகரன்..

  அதிமுக தொடர்ந்து 8வது முறையாக வெல்லுமா... 30 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றிக் கொடி நாட்டுமா... விரலில் விடையோடு ஏப்ரல் 6ம் தேதிக்காக காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்....
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: