ஆர்.கே.நகர்... கடந்த 6 வருட தமிழக அரசியல் வரலாற்றை இந்த தொகுதி இல்லாமல் எழுதிவிட முடியாது... சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவி இழந்த ஜெயலலிதா விடுதலையான பின் ஆர்.கே.நகர் தொகுதியில் 2015ம் ஆண்டு போட்டியிட்டு எம்எல்ஏவானார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டே முதலமைச்சரனார் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ஒத்திவைக்கப்பட்டது. 2017 டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற டி.டி.வி. தினகரன்தான் தற்போதைய எம்எல்ஏ.
மீனவர்களும், கூலித் தொழிலாளிகளும் நிறைந்த தொகுதி இது... மொத்த வாக்காளர்களில் 38 விழுக்காட்டினர் மீனவர்கள்தான்... அவர்களின் வாக்குகளே பெரும்பாலும் வெற்றியாளரை தீர்மானிக்கிறது. 2000 விசைப்படகுகள், 7000 பைபர் படகுகள் வந்து செல்லும் காசிமேடு துறைமுகம் இந்த தொகுதியில்தான் வருகிறது... இங்கே வசிப்பவர்கள் பெரும்பாலும் இரு தலைமுறைக்கு முன்பாக தென்மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான்... பர்மாவில் இருந்து சென்னை திரும்பிய ஏராளமானோரும் உண்டு... அவர்கள் வியாபாரம் செய்து கொள்வதற்காக பாரிமுனை அருகே அரசு அமைத்துக் கொடுத்ததுதான் பர்மா பஜார்...
பர்மாவின் பிரபல உணவான அத்தோ வடசென்னையில் மையம் கொண்டது இவர்களால்தான்... ஐஓசி, எச்.பி.சி.எல் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உண்டு. 10 முறை பொதுத்தேர்தலும், இருமுறை இடைத்தேர்தலும் நடந்துள்ள இந்த தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா 2 முறை வென்றுள்ளன. 1996க்கு பின் திமுக இங்கே வென்றதில்லை.
2017இல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட சசிகலா அணியின் டி.டி.வி.தினகரன் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மேலும் படிக்க... திருப்புமுனை: அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ‘பஞ்ச் டயலாக்’
மக்கள் அடர்த்தி அதிகமான தொகுதி என்பதால் குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், ஒலி மாசுபாடு என பிரச்னைகளுக்கு குறைவே இல்லாத தொகுதி... வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் வடசென்னையில் உள்ள ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுப்பதாக உள்ளது. நிலத்தடி குழாய்களில் எண்ணெய் கசிந்து குடிநீரில் கலப்பது, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுகாதாரச்சீர்கேடு என சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எந்த எம்எல்ஏவும் நிரந்தரத் தீர்வு காணாதது சோகமானது.
ஜெயலலிதா வென்ற தொகுதியில் மீண்டும் அதிமுக வெல்லுமா.. தனது பலத்தை நிரூபித்த டி.டி.வி.தினகரன் தொகுதியை தக்க வைத்து கவுரவத்தை காப்பாற்றவாரா என்ற கேள்விகளுக்கு தேர்தலில் விடை கிடைக்கும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.