கடலைச் சேராத வைகை நதி கரை தொடாமல் ஓடும் ஊர் பரமக்குடி... மதுரைக்கு அடுத்தபடியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பத்து நாள் திருவிழாவாக இங்கே களைகட்டும்... முத்தலாம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பல்லாயிரம் பேர் பால்குடம் எடுத்து வருவதைக் காண இரு கண்கள் போதாது... ராமநாதபுரம் மாவட்டத்தின் இதயமாய் இருக்கும் பரமக்குடியில் ஆறு ஓடினாலும் பெரும்பாலும் மானாவரி விவசாயம்தான் பல்லாயிரம் பேருக்கு சோறு போடுகிறது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் நெல், கடலை, மிளகாய், பருத்தி உள்ளிட்டவை விளைகின்றன. தைப்பொங்கலுக்கு பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் 500 ஏக்கரில் விளையும் பகுதிக்கு மஞ்சள்பட்டினம் என்ற பெயரே உண்டு. பார்த்திபனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கருவேல மரங்களை வெட்டி விறகாக்கி மூட்டம் போட்டு அடுப்புக் கரி எடுக்கும் பணியில் மட்டும் பல்லாயிரம் பேர் ஈடுபடுகின்றனர். ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு இந்த அடுப்புக்கரி விற்கப்படுகிறது.
தோசைக்கல்லில் வெங்காயம் முட்டை போட்டு சால்னா ஊற்றி செய்யப்படும் டிங் டாங் என்ற உணவு தனி சுவை வெளியூர் காரர்களையும் வசீகரிக்கக் கூடியது. பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் பல்லாயிரம் பேர் நெசவு நெய்யும் தொழிலில் ஈடுபடும் நிலையில், பட்டு, அம்பர் மற்றும் கைத்தறி ஆடைகள் பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்டுபடுகின்றன. மக்கள் நீதி மய்யத் தலைவரும், திரைத்துறையில் அரை நூற்றாண்டு கண்ட பன்முகக் கலைஞன் கமல்ஹாசனின் சொந்த ஊர் இந்த பரமக்குடி...
பரமக்குடியில் அதிகபட்சமாக அதிமுக இதுவரை 8 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை மட்டுமே வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.
2016ம் ஆண்டு அதிமுக சார்பில் வென்ற முத்தையா, டி.டி.வி.தினகரன் பக்கம் சேர்ந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சதன் பிரபாகர் 14,032 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 82,438 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சம்பத் குமார் 68,406 வாக்குகள் பெற்றார்.
பரமக்குடி தொகுதியில் உள்ள 2,54,381 வாக்காளர்களில் அதிகபட்சமாக 1,28,298 பேர் பெண்கள். 1,26,068 பேர் ஆண்கள். 15 பேர் திருநங்கைகள்.
பரமக்குடியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் தவறாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கொடுக்கும் வாக்குறுதி... வழக்கம்போல இந்த தேர்தலிலும் அது இடம்பெற்றிருக்கிறது. தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு பேருந்துகள் ஊருக்குள் வராமல் அந்த வழியில் அதிகமாக செல்வதால் புறவழிச்சாலையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள். நெசவு நூல்களை சரி செய்ய அல்லுக்கூடம் அமைத்துத் தர வேண்டும் என்பது நெசவாளர்களின் ஒட்டுமாத்த கோரிக்கையாக இருக்கிறது.
இது அதிமுகவின் கோட்டை என்பது இந்த தேர்தலிலும் நிரூபணமாகுமா... 24 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றியை சுவைக்குமா... சில மாதங்கள் காத்திருப்போம்....
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Ramanathapuram, TN Assembly Election 2021