இலங்கைக்கு மிக மிக அருகில் உள்ள ராமேஸ்வரத்தைக் கொண்ட தொகுதி ராமநாதபுரம். காசிக்கு இணையாக போற்றப்படும் ராமநாதசுவாமி கோயிலும்,1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் அழிந்த தனுஷ்கோடியும் இந்த தொகுதியின் அடையாளங்கள். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், உத்தரகோச மங்கை மங்களநாதர் கோயில் என ஆன்மிகத் தலங்களுக்கு பஞ்சமில்லாத தொகுதி. ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்கள் ஆண்ட ராமலிங்க விலாசம் அரண்மனை இன்றும் வரலாறு பேசிக் கொண்டிருக்கிறது.நூறாண்டுகள் கடந்த இந்தியாவின் முதல் கடல் பாலமான 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள பாம்பன் பாலம் பெருமைமிகு அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த மண்.பேய்க்கரும்பில் நீங்காத நினைவுகளோடு நிற்கிறது நினைவிடம்.
ராமேஸ்வரம் முதல் கீழக்கரை வரை 65 கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும் கடற்கரையை ஒட்டி 1,650 விசைப்படகுகள், 280 நாட்டுப் படகுகளில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது சார்ந்து 50 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கச்சத்தீவு உரிமை பிரச்னை மற்றும் கடல் எல்லை பிரச்னையால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் பிரச்னைக்கு இதுவரை தீர்வில்லை.
ராமநாதபுரம் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுகவே ஆறுமுறை வென்றுள்ளது. அதிலும் அக்கட்சியின் டி.ராமசாமி 1977 முதல் தொடர்ந்து 3 முறை வென்றுள்ளார். திமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
கடைசியாக 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போதைய எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா திமுக கூட்டணி சார்பில் களம் கண்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மணிகண்டன் களம் இறக்கப்பட்டார். ஜவாஹிருல்லாவிற்கு 56,143 வாக்குகளே கிடைத்த நிலையில் 89,365 வாக்குகள் பெற்று மணிகண்டன் வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க...உங்கள் தொகுதி: சிவகாசி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்
ஓயாத துயரமான மீனவர்கள் சிறைபிடிப்புதான் இந்த தொகுதியின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது... மீன்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்குகள், இறால் மீன்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வாக்களிக்கப்போகும் வாக்காளர்களின் மனதில் என்ன இருக்கிறது என அறிந்து கொள்ளலலாமா...
அதிமுகவின் வெற்றிக்கணக்கில் இருக்கும் இந்த தொகுதி மீண்டும் திமுகவின் கைக்கு வருமா என்பதற்கு விடையோடு காத்திருக்கிறது வரப்போகும் தேர்தல்...
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.