உங்கள் தொகுதி: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

இது உங்கள் தொகுதி... அறிந்ததும்... அறியாததும்.... இன்று நாம் பார்க்கப்போகும் சட்டமன்றத் தொகுதி சின்ன வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற பெரம்பலூர்...

 • Share this:


  பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகியவை அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. ஆலத்தூர் வட்டாரத்தில் சுமார் 25 கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது... மக்காச்சோளம் 25 ஆயிரம் ஹெக்டேரிலும், 20 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தியும் விளைகின்றன... எறையூரில் 50 ஆண்டுகளாக செயல்படும் அரசு சர்க்கரை ஆலையிலும், உடும்பியத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையிலும் சேர்ந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் கரும்பு அரவை நடைபெறுகிறது.

  பெரம்பலூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் இந்த சர்க்கரை ஆலைகளையே நம்பியிருக்கின்றனர். சிறிய மலைகள் அதிகமுள்ள பெரம்லூர் தொகுதியில் கட்டுமானத்திற்கு பயன்படும். கற்கள், ஜல்லி, எம்.சான்ட் மணல் உள்ளிட்டவை தயாரிக்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருச்சி - சென்னை சாலையில் அமைந்துள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தவிர்த்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை...

  தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது விசுவக்குடி நீர்த்தேக்கம்.... கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள மயிலூற்று அருவியும், கோரையாறு அருவியும் மழைக்கால பொழுதுபோக்குமிடங்களாக இருக்கின்றன...

  பெரம்பலூர் தொகுதியில் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சி 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளன.

  2016ல் நடந்த தேர்தலில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆர். தமிழ்செழியன் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டார். ஒரு லட்சத்து ஆயிரத்து 73 வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக எம்எல்ஏ ஆனார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சிவகாமி 94,220 வாக்குகள் பெற்று தோற்றார்.

  பெரம்பலூர் தொகுதியில் ரயில் பாதை திட்ட வாக்குறுதிக்கு வயது 50-ஐ தாண்டி விட்டது... திருமாந்துறையில் 3 ஆயிரம் ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை திட்டம் கைகூடவில்லை. பாடாலூர் - இரூர் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறுமா... 15 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றி பெறுமா... விடை காண தேர்தல் நாளுக்காக காத்திருப்போம்..
     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: