ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உங்கள் தொகுதி: நத்தம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: நத்தம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: நத்தம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

ஒருவரே தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற தொகுதி பற்றித்தான் இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும்... அறியாததும் தொகுப்பில் பார்க்கப்போகிறோம்... அந்த தொகுதி நத்தம்... அந்த வேட்பாளர் எம்.ஆண்டி அம்பலம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட மலையும் மலை சார்ந்த பகுதிகளுமான தொகுதி நத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் பேரூராட்சியாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக தவிர்க்க முடியாத ஊர். சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக மாம்பழங்கள் அதிகம் விளையும் பூமி. 6,963 ஏக்கரில் மாம்பழ சாகுபடி நடைபெறிகறது. 4,587 ஹெக்டோரில் தென்னை மரங்கள் இருக்கின்றன. மலைவாசஸ்தலமான சிறுமலை இந்த தொகுதிக்குள்தான் வருகிறது. சிறுமலை மலை வாழையின் சுவைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. பழனி பஞ்சாமிர்தத்திற்கு சுவையூட்டிய பெருமை மிக்கது இந்த மலைவாழை. இது 325 ஹெக்டேர் அளவில் விளைகிறது.

நத்தத்தையும், கோவில்பட்டியையும் பிரிக்கிறது திருமணி முத்தாறு. கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் 5ம் நூற்றாண்டு பழமையான ஓவியங்கள் இருக்கின்றன. திரும்பும் திசையெல்லாம் ஆதி சிவ அய்யனார் வழிபாட்டை இங்கே காண முடியும். அய்யனாருக்கு புரவி எடுக்கும் விழாக்களும், நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழாவும் பிரசித்திபெற்றவை. மாசியில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவில் பால் குடம், அக்னி சட்டி எடுத்து தீ மிதித்து பலரும் நேர்த்திக் கடன் செலுத்த 50 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் திரளுவார்கள். 120 ஆண்டுகள் கண்ட நத்தம் பெரிய பள்ளி வாசலும் தொகுதியின் அடையாளமாக திகழ்கிறது. ஆயத்த ஆடை தயாரிப்புக்கு குட்டி திருப்பூராக பெயர் பெற்ற நத்தம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. இந்த தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு வென்ற பெருமைக்கு உரியவர் எம்.ஆண்டி அம்பலம். இவர் காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் போட்டியிட்டார். அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றவர்.

1977ல் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 4 முறையும், திமுக, த.மா.கா. தலா ஒரு முறையும் இங்கே வெற்றிக் கொடி நாட்டியுள்ளன.

2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த எம்.ஆண்டி அம்பலத்தின் மகனான எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக சார்பில் களம் இறங்கினார். அவர் வெறும் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஷாஜகானை தோற்கடித்தார். எம்.ஏ. ஆண்டி அம்லபத்திற்கு 93,822 வாக்குகளும், ஷாஜகானுக்கு 91,712 வாக்குகளும் கிடைத்தன. நத்தம் தொகுதியில் மொத்தமுள்ள 2,82,616 வாக்காளர்களில் 1,44,623 பேர் பெண்கள். 1,37,940 பேர் ஆண்கள். 53 பேர் திருநங்கைகள்.

நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் படிக்க திண்டுக்கல், அல்லது மதுரைக்கு செல்ல வேண்டிய நிலையே இருக்கிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பலர் 12ம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். அதனால் அரசு சார்பில் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளாக கேட்பரற்று இருக்கிறது. புளி மற்றும் மாம்பலத்திற்கு கொள் முதல் நிலையம் வேண்டும், குளிர்பதன கிடங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.

மேலும் படிக்க...உங்கள் தொகுதி: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

நத்தம் தொகுதி இந்த முறை ஆண்டிஆம்பலத்தின் குடும்பத்திற்கா... நத்தம் விஸ்வநாதன் தொகுதியில் மீண்டும் களம் காண்பாரா.. விடைகளுடன் காத்திருக்கிறது சட்டமன்றத் தேர்தல்...

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Natham Constituency, TN Assembly Election 2021