உங்கள் தொகுதி: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை அரசு அறிவித்தது அதிமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதிமுக இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அதைவிட வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

  • Share this:
    புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது மயிலாடுதுறை. ‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற சொலவடையை பெற்ற நகரம் மயிலாடுதுறை. 2021 சட்டமன்ற தேர்தல், தமிழகத்தின் 38வது மாவட்டமாக அவதரித்த உடன் மயிலாடுதுறை எதிர்கொள்ளப்போகும் முதல் தேர்தல். ஆடி அசைந்து செல்லும் காவிரியின் தயவால் 16,000 ஹெக்டேரில் நெல் விளைகிறது. ஆலைக் கரும்பு, பொங்கல் கரும்பும் குறைவின்றி நிறைவாக விளையும் பூமி மயிலாடுதுறை. மாயூரநாதர் கோயில் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் என பழங்காலக் கோயில்கள் சூழ்ந்த ஊர். மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் நடக்கும் துலா உற்சவ திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் திரளுவார்கள்.

    மேலும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா புஷ்கரம் கடைசியாக 2017ஆம் ஆண்டு நடந்தபோது 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்று காவிரியில் நீராடினர். 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சித்தர்காடு கருவாட்டுச் சந்தை இந்த தொகுதியின் இன்னொரு அடையாளம். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இந்த சந்தைக்கு தஞ்சை, கரூர், கோவை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் வந்து குவிகிறார்கள்.

    மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் வென்ற எம்எல்ஏக்களில் திமுகவின் சத்தியசீலன், காங்கிரசின் ராஜகுமார் தவிர்த்து மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சி மாறியவர்கள்தான். நான்குமுறை திமுக சார்பில் வென்ற கிட்டப்பா, அதிமுகவிற்கு தாவினார். அதிமுக சார்பில் 1984இல் வென்ற தங்கமணி திமுகவிற்கு தாவினார்..

    இங்கே அதிகமுறை வெற்றி பெற்ற கட்சி திமுகதான். அக்கட்சி 6 முறை வென்றதில் 4 முறை என்.கிட்டப்பா எம்எல்ஏவானார். காங்கிரஸ் 4 முறையும் அதிமுக 2 முறையும் வாகை சூடியுள்ளன. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்ட வீ.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் குத்தாலம் க.அன்பழகனை 4,778 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்டிகத்தார்.

    இந்த தொகுதியில் 40 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் மக்கள் இன்னலையே அனுபவித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 20 முறை பாதாளச்சாக்கடைத் திட்ட பிரதானக் குழாய் உடைந்து சாலை உள்வாங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தலைஞாயிறு சர்க்கரை ஆலை புனரமைப்பு என இந்த தொகுதி மக்களின் கோரிக்கைப் பட்டியில் மிகவும் நீளமானது. மயிலாடுதுறை மக்கள் இந்த தேர்தலை எப்படிப் பார்க்கின்றார்கள் தெரியுமா?

    மேலும் படிக்க.. .உங்கள் தொகுதி: சூலூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

    புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை அரசு அறிவித்தது அதிமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது., அதிமுக இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அதைவிட வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: