Home /News /tamil-nadu /

உங்கள் தொகுதி: உலக பிரபலமான 2009 இடைத்தேர்தல்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதி - திருமங்கலம் தொகுதியை அறிவோம்

உங்கள் தொகுதி: உலக பிரபலமான 2009 இடைத்தேர்தல்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதி - திருமங்கலம் தொகுதியை அறிவோம்

Youtube Video

இன்றைய உங்கள் தொகுதி.... அறிந்ததும் அறியாததும்... தொகுப்பில் நாம் பார்க்கப்போவது மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி... அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தொகுதி பற்றிய சிறப்புகள் இதோ....

  மதுரை மீனாட்சியம்மனின் கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து தந்த திருமாங்கல்யபுரமே மருவி திருமங்கலமாக பெயர் பெற்றது என்பது நம்பிக்கை. தமிழகத்தின் ஒரே ஒரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இருக்கின்ற மதுரையின் புறநகர் தொகுதிதான் இந்த திருமங்கலம். வெள்ளையைர்களை எதிர்த்து முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றமே ஹோமியோபதி மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது. கட்டபொம்மனை தூக்கிலிட பயன்படுத்திய கயிறு இன்றும் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவும், டி. கல்லுப்பட்டியில் நடைபெறும் ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழாவும் புகழ்பெற்றவை.

  விவசாயத்தை பிரதானமாக கொண்டிருந்தாலும் எப்போதாவது நீர் ஓடும் குண்டாறு, கமண்டல ஆற்றைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக பாசன வசதி இல்லாத தொகுதி இது. அதனால் மானாவரி பயிர்களான துவரை, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்டவைதான் அதிகம் விளைவிக்கப்படுகிறது. திருமங்கலத்தின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து வரும் திருமங்கலம் பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் கடந்த 30 ஆண்டுகளாக ஊர் வந்து சேர்ந்ததே இல்லை என்பது இந்த தொகுதியின் தாக வரலாறு.

  கப்பலூர் தொழிற்பேட்டை தவிர்த்து வேறு முக்கியத் தொழிற்சாலைகள் இல்லை என்றபோதும் உச்சப்பட்டி துணைக்கோள் நகரத்தில் வீட்டு மனை விற்பனை தொடங்கியுள்ளதும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதும் திருமங்கலத்திற்கு புதிய அடையாளத்தை கொடுத்துள்ளன.

  அமெரிக்கா வரை எதிரொலித்த ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பார்முலாவின் உச்சமான திருமங்கலத்தின் 2009 இடைத்தேர்தலை தமிழக அரசியல் களம் அத்தனை எளிதில் மறந்துவிடாது.

  1952ஆம் ஆண்டு முதலே இருக்கும் இந்த தொகுதியில் காங்கிரசும், அதிமுகவும் தலா 5 முறை வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளன. 2009ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலையும் சேர்த்து திமுக 3 முறை வாகை சூடியுள்ளது.

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி: திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  கடைசியாக 2016இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் களம் இறக்கப்பட்டார். திமுக கூட்டணியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயராம் தோல்வியடைந்தார். வெற்றிக்கு பின் அமைச்சராகவும் பொறுப்பேற்ற ஆர்.பி.உதயகுமார் 23,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தார்.

  திருமங்கலத்தில் நிறைவேறாத கோரிக்கைகளுக்கு பஞ்சமில்லை.. புதிய பேருந்து நிலையத்திற்கு இடம் அடையாளம் காணப்பட்டபோதும் 4 ஆண்டுகளாக அதற்கான பணி தொடங்கப்படவில்லை. ரயில்வே மேம்பாலம் இல்லாததால் தினமும் 50 முறை மூடப்படும் காமராஜபுரம் ரயில்வே கேட்டால் 10 கிராம மக்கள் தவித்து வருகின்றனர். பேரையூர் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 30 கோடி ரூபாயில் டேரா அணை திட்டத்தை எம்ஜிஆர் அறிவித்தபோதும் 30 ஆண்டுகளாக அது கனவுத் திட்டமாகவே தொடர்கிறது. தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்தாலும் ஓட்டுப் போடத் தயாராகிவிட்டார்கள் திருமங்கலம் வாக்காளர்கள்.

  அமைச்சரின் தொகுதி மீண்டும் அதிமுகவுக்கே கிடைக்குமா.. இழந்த தொகுதியை திமுக திரும்பப் பெறுமா... விடை கிடைக்கும் இன்னும் சில மாதங்களில்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Madurai, Thirumangalam, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி