உங்கள் தொகுதி: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

Youtube Video

உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போவது மண் மணக்கும் மதுரையில் உள்ள கிழக்கு தொகுதி...

 • Share this:


  மதுரை வரலாற்றின் சிறு துளி யானை மலையாய் நிற்கும் தொகுதி மதுரை கிழக்கு... இந்த மலையில்தான் சுமார் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டும், சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. முருகனுக்கு லாடன் கோயில் எனப்படும் குடவரைக்கோயில் இங்கே உண்டு. இதன் வடமேற்கே நரசிங்க பெருமாளுக்கும் குடைவரை கோயில் அரிய கல்வெட்டுகளுடன் இருக்கிறது. பத்மாசனமிட்டு யோக நிலையில் நிற்கும் பாண்டி கோயில் மதுரை கிழக்கு தொகுதியின் முக்கிய அடையாளம். இங்குள்ள சமய கருப்பசாமி கோயிலில் ஆடு, கோழி படையலிட்டு இன்றும் சாராயம், சுருட்டு படைத்து வழிபடுகிறார்கள் மக்கள்.

  மதுரை மாநகராட்சி எல்லையில் அமைந்திருந்தாலும் நகரின் விரிவாக்க பகுதிகளும், கிராமங்களும் தொகுதியை அலங்கரிக்கின்றன. நாராயணபுரம், அய்யர் பங்களா, வண்டியூர், உயர்நீதிமன்றக் கிளை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட இந்த தொகுதியின் ஒத்தக்கடையில் செயல்படும் 200க்கும் மேற்பட்ட எவர்சில்வர் தொழிற்சாலைகளை நம்பி 50 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

  இலந்தைக் குளத்தில் 28. 91 ஏக்கரில் எல்காட் சார்பில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா இப்பகுதியில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை நனவாக்க காத்திருக்கிறது. 1,500 தறிகள் இருந்த வண்டியூர் பகுதியில் இன்று 800 தறிகளே உள்ளன. ஆனால் இன்றும் 25 ஆயிரம் பேருக்கு தறிச்சத்தம்தான் சோறு போட்டுக்கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்கு பாடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.ஜானகியம்மாளையும், என்.சங்கரய்யாவையும் எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தவர்கள் இந்த தொகுதி வாக்காளர்கள்.

  இங்கு பெரும்பாலும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிதான் பறந்துள்ளது. அந்த கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

  கடைசியாக 2016ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட மூர்த்தி 32,772 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பாண்டியை தோற்கடித்தார். மூர்த்திக்கு 1,08,569 வாக்குகளும், பாண்டிக்கு 75,797 வாக்குகளும் கிடைத்தன.

  மதுரை கிழக்கு தொகுதியில் 3,24,145 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,66,564 பேர் பெண்கள். 1,60,643 பேர் ஆண்கள். 47 பேர் திருநங்கைகள்.

  வண்டியூர் பகுதியில் நெசவாளர்களுக்கு பாவு உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதால் நெசவுத் தொழில் பின்னடவைச் சந்தித்துள்ள நிலையில் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வாக்காளர்கள். பெரும்பாலும் மதுரையின் விரிவாக்கப் பகுதிகளை கொண்ட இந்த தொகுதியில் பாதாளச்சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளுக்காக மக்கள் இன்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

  உத்தங்குடி - சமயநல்லூர் இணைப்புச் சாலைக்கு ஒப்புதல் கிடைத்து பணி நடந்து வருவது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. குறைகளைத் தாண்டி வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தொகுதியை வைத்துள்ள திமுக மீண்டும் மார்க்சிஸ்ட்டிற்கு தாரை வார்க்குமா... அப்படி கிடைத்தால் இழந்த தொகுதியை மார்க்சிஸ்ட் மீட்குமா.. விடை காண காத்திருப்போம்.

  .


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: