• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • உங்கள் தொகுதி: கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதியை பற்றி இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் பார்க்கலாம்.

 • Share this:
  திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது கீழ்பென்னாத்தூர். திருவண்ணாமலை மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகளில் இருந்து சில பகுதிகளை பிரித்து 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதி இது. பெரிதாக நீராதாரம் இல்லலாத இங்கே நெல் 3000 ஏக்கரிலும், நிலக்கடலை 5000 ஏக்கரிலும் விளைகிறது. ஆங்கிலேயர் காலத்தில் வரி வசூல் உரிமையை பெற்றிருந்த வேட்டவலம் ஜமீனின் தற்போதைய வாரிசாக மகேந்திர பண்டாரியார் வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

  ஞாயிறு தோறும் கூடும் தல்லாகுளம் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு வந்தாலும் கறவை மாடு வாங்குவதற்காக நூற்றுக் கணக்கானோர் வருவார்கள். திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும், பொதுமக்களும் வருவதால் களைகட்டும் இந்த சந்தை. ஆவூரில் சுமார் 1,500 குடும்பங்கள் இயந்திரம் மூலம் கோரைப்பாய் நெய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே தயாராகும் கல்யாணப்பாய், டிசைன் பாய், மணமகள், மணமகன் பெயர் பொரித்த பாய்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்டிராவுக்கும் அனுப்பப்படுகின்றன.

  2011ம் ஆண்டு கீழ்பென்னாத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டபோது அதிமுகவைச் சேர்ந்த அரங்கநாதன் வெற்றி பெற்றார். கடந்த முறை திமுக கைப்பற்றியது. திமுகவின் பிச்சாண்டி 99,070 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வமணி 64,404 வாக்குகள் பெற்று தோற்றார்.

  கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 2,52,047 வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 1,28,317 பேர் பெண்கள். 1,23,722 பேர் ஆண்கள். 8 பேர் திருநங்கைகள்.

  கீழ்பென்னாத்தூரில் ஒரு நிழற்குடை போல பேருந்து நிறுத்தமே உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் இங்கே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தல்லாகுளம் சந்தை திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையோரம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், சந்தை நடத்த தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  நெசவாளர்களுக்கு வழங்குவதுபோல் தங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது பாய் நெய்பவர்களின் எதிர்பார்ப்பு. இந்த தொகுதிக்குள் சென்றாலும் நந்தன் கால்வாயால் எந்த பயனும் இல்லை. அதனால் தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியில் கால்வாயை சாத்தனூர் அணையுடன் இணைத்து கீழ்பென்னாத்தூர் தொகுதி விளை நிலங்களுக்கு உரிய நீர்பாசன வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என காத்திருக்கிறார்கள் விவசாயிகள். பாலானந்தல், கிளியாபட்டு, வட அரசம்பட்டு உள்ளிட்ட 50 கிராமங்களில் விளைநிலங்களில் பவர் கிரிட் எனும் தனியார் நிறுவனம் உயர்அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு உரிய இழப்பீடு வழங்காதது பெரும் பிரச்னையாக தொடர்கிறது.

  இந்நிலையில் கீழ்பென்னாத்தூரை மீண்டும் தக்க வைக்குமா திமுக... இழந்த தொகுதியை மீட்கமா அதிமுக... பொறுத்திருந்து பார்ப்போம்..

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: