உங்கள் தொகுதி : தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதி கவுண்டம்பாளையம்..

Youtube Video

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் பற்றித்தான் இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் பார்க்கப்போகிறோம்..

  • Share this:


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதி கவுண்டம்பாளையம். துடியலூர், காளப்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்ட நகரப் பகுதிகளையும், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட பல கிராமங்களையும், ஆனைகட்டி மற்றும் அது சார்ந்த மலைக்கிராமங்களையும் கொண்டிருக்கிறது. பெரிய தடாகத்தில் உள்ள அனுபாவி சுப்பிரமணியர் கோயிலும், கோவை விமான நிலையமும் இந்த தொகுதியின் அடையாளங்கள். விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இங்கு 75000 ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு, தக்காளி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

வேலாண்டிபாளையம், இடையர் பாளையம், டிவிஎஸ் நகர், வெள்ளக்கிணறு உள்ளிட்ட நகரப்பகுதியில் பம்பு செட், கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, குறுந்தொழில் கூடங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குகின்றன. 15000 தொழிற்சாலைகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தடாகத்தை சுற்றியுள்ள 200 செங்கல் சூளைகள் 20000கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன.

2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கவுண்டம்பாளையம் இதுவரை இரு சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவின் வி.சி.ஆறுக்குட்டியே வெற்றி பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆறுக்குட்டி 8,025 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு 1,10,870 வாக்குகளும், திமுகவின் பையா என்ற கிருஷ்ணனுக்கு 1,02,845 வாக்குகளும் கிடைத்தன.

வாக்காளர்கள் அடிப்படையில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில் மொத்தம் 4,61,000 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2,30,908 பேர் பெண்கள். 2,29,997 பேர் ஆண்கள். 95 திருநங்கைகள். கவுண்டம்பாளையம் தொகுதியில் யானை - மனித மோதல் முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது. உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். செங்கல்சூளைகளுக்காக சின்ன தடாகம், பன்னிமடை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி செம்மண் அள்ளப்பட்டதால் அப்பகுதிகள் பள்ளத்ததாக்குகளாக மாறிவிட்டன.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி பல செங்கல்சூளைகள் செயல்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொழிற்கூடங்கள் அதிகமுள்ள இந்த தொகுதியில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைத்துத்தர வேண்டும் என்பது தொழில்துறையின் கோரிக்கையாக இருக்கிறது. எதிர்பார்ப்புகள் பல இருந்தாலும் நடப்பு அரசியலை அசைபோட்டபடி வாக்களிக்கத் தயாராகி வருகிறார்கள் கவுண்டம்பாளையம் மக்கள்.

மேலும் படிக்க.. அதிமுக கூட்டணியில் நீடிக்கும் இழுபறி..

ஆறுக்குட்டி இந்த முறையும் தொகுதியைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா? திமுகவின் கொடி முதல் முறையாக பறக்குமா? ஏப்ரல் 6-ஆம் தேதிக்காக காத்திருப்போம்..

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published: