• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • உங்கள் தொகுதி: செட்டிநாடு என அழைக்கப்படும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: செட்டிநாடு என அழைக்கப்படும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

Youtube Video

உணவுக்கும், கட்டடங்களுக்கும் புகழ்பெற்ற, செட்டி நாடு என அழைக்கப்படும் காரைக்குடி தொகுதியைப் பற்றித்தான் இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் காரைக்குடி, தேவகோட்டை என இரு நகராட்சிகளுடன் உள்ள தொகுதிதான் காரைக்குடி. இதனை கல்வி குடிகொண்ட ஊராக மாற்றியவர் தொழிலதிபர் அழகப்ப செட்டியார். 1947இல் அவர் ஒரு லட்ச ரூபாயில் தொடங்கிய கல்லூரி இன்று ஆயிரம் ஏக்கரில் பல்கலைக்கழகமாக விரிந்து பரந்து 70 ஆண்டுகளாய் இப்பகுதி மக்களை கை தூக்கி விட்டுக்கொண்டிருக்கிறது. பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் சுண்ணாம்பால் கட்டப்பட்ட தனித்துவமான செட்டிநாட்டு பங்களாக்களில் கானாடுகாத்தானில் அண்ணாமலை செட்டியாரால் நிறுவப்பட்ட அரண்மனை முக்கியமானது. 108 ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் இந்த அரண்மனையின் மர வேலைப்பாடுளையும், கட்டட அழகையும் நாளெல்லாம் கண்டு ரசிக்கலாம்..

  மேலும் வெள்ளைப் பணியாரம், இனிப்பு வகையான மணகோலம், மாவுருண்டை, சீடைகள் என செட்டிநாட்டை அடையாளப்படுத்தும் பலகாரங்களுக்கு பஞ்சமில்லை. கொத்தமங்கலத்தில் கைகளால் எவர் சில்வர் பாத்திரம் செய்யும் தொழிலில் இன்று வெறும் 50 குடும்பங்களுடன் சுருங்கிவிட்டது... புகழ்பெற்ற செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலை நெய்வதற்கும் இன்று 50 வீடுகளே இருக்கின்றன.

  பெரிய நீராதாரம் இல்லாத வானம் பார்த்த பூமியாக இருந்தபோதும் 50,000 ஏக்கரில் நெல் விளைகிறது. தமிழ் திரையுலக முன்னோடியான ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் முதல் முதலில் படப்பிடிப்பு ஸ்டூடியோ அமைத்தது இந்த தொகுதியில் உள்ள அமராவதிபுதூர்தான். ஆச்சி மனோரமா, ராமநாராயணன், பஞ்சு அருணாசலம், கரு.பழனியப்பன் என பல திரை பிரபலங்களை தந்த தொகுதி இது.

  காரைக்குடியில் காங்கிரசும், அதிமுகவும் தலா 4 முறை வெற்றி பெற்றுள்ளன. திமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளன. பாஜக சார்பில் 2001ம் ஆண்டு எச்.ராஜா 1,651வாக்கு வித்தியாத்தில் பெற்றார்.

  கடைசியாக 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.ராமசாமி 93 ஆயிரத்து 419 வாக்குகள் பெற்று 18,283 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் கற்பகம் இளங்கோ 75,136 வாக்குகள் பெற்றார்.

  காரைக்குடியில் மொத்தம் உள்ள 3,15,351 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 399 பேர் பெண்கள். 1,54,905 பேர் ஆண்கள். 47 பேர் திருநங்கைகள்.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  வானம் பார்த்த பூமியான காரைக்குடி தொகுதியை தற்போது தொடங்கப்பட்டுள்ள காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் வளம்கொழிக்கச் செய்யும் என நம்புகிறார்கள் மக்கள். அதேநேரம் தொழிற்சாலைகள் அமைந்து வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும் என்பது 30 ஆண்டுகளாக எதிர்பார்ப்பாகவே இருப்பதுதான் வேதனையானது. ஆரம்பிக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை திட்டமும் மூடுவிழா கண்டது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. சுற்றுலா, கைத்தறி சேலை நெசவு, எவர்சில்வர் பாத்திர தயாரிப்பு ஆகியவை எம்எல்ஏக்களால் கண்டுகொள்ளப்படாதவைகளின் பட்டியலில் முதலிடத்தில் எப்போதும் போல் இருக்கின்றன. காரைக்குடியில் காங்கிரசின் வெற்றிக் கொடி தொடர்ந்து பறக்குமா என தேர்தலில் பார்க்கலாம்.

  வீடியோ

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: