உங்கள் தொகுதி: கோவையின் தொழில் வளம் மிக்க தொகுதிகளில் ஒன்று சிங்காநல்லூர் அறிந்ததும் அறியாததும்

Youtube Video

கோயம்புத்தூர் நகரமே தொழில்வளர்ச்சிக்கு பெயர் பெற்றது என்றால் அதில் தவிர்க்க முடியாத தொகுதி சிங்காநல்லூர்... அந்த தொகுதி பற்றித்தான் இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் பார்க்கப் போகிறோம்...

 • Share this:


  கோயம்புத்தூரின் தொழில் வளம் மிக்க தொகுதிகளில் ஒன்று சிங்காநல்லூர்... ஆவாரம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் தொழிற்கூடங்களின் சத்தம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். வெட் கிரைண்டர், மோட்டார் பம்பு செட் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் செயல்படுகின்றன. பஞ்சாலைகள், வார்ப்பட ஆலைகளான பவுண்டரிகளும் கணிசமான எண்ணிக்கையில் உண்டு. சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன. சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்வதில் தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த அளவில் இருக்கிறது.

  கோவையில் பிளேக் நோய் பரவியபோது அதை குணப்படுத்தியதாக மக்களால் நம்பப்படும் மாரியம்மனுக்கான கோயில் பிளேக் மாரியம்மன் என்ற பெயரிலேயே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பல்லுயிர் சூழல் கொண்ட குளம் சிங்காநல்லூரின் மற்றொரு அடையாளம். கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான நிலையம் சிங்காநல்லூரில் தான் இருக்கிறது. சென்ட்ரல் ஸ்டூடியோ கோவையில் செயல்பட்டபோது சிங்காநல்லூரில் தங்கியிருந்துதான் திரைப்படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதி வந்தார்.

  சிங்காநல்லூரில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் வாகை சூடியுள்ளன. பிரஜா சோசலிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா 2 முறை வென்றுள்ளன. ஜனதா கட்சியின் செங்காளியப்பன் 1984ல் வெற்றி பெற்றுள்ளார்., 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் கார்த்திக் 5,180 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் சிங்கை முத்துவை தோற்கடித்தார். கார்த்திற்கிற்கு 75,459 வாக்குகளும், சிங்கை முத்துவிற்கு 70,279 வாக்குகளும் கிடைத்தன. சிங்காநல்லூரில் மொத்தமுள்ள 3,23,614 வாக்காளர்களில் 1,62,042 பேர் பெண்கள். 1,60,790 பேர் ஆண்கள். 25 பேர் திருநங்கைகள்.

  திருச்சி சாலை, அவினாசி சாலை உள்ளிட்ட இந்த தொகுதியின் பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றவை... வாகன போக்குவரத்தை எளிமையாக்க மேம்பாலங்கள் கேட்டு காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்... எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலணியில் 10 ஆண்டுகளாக சிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணியும், ஹோப் காலேஜ் - தண்ணீர் பந்தல் சாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணியும் இந்த தொகுதி மக்களின் தீராத தலைவலியாக இருக்கின்றன. வெற்றியை தீர்மானிக்கும் தொழிலாளர்களின் மனதில் எந்த கட்சி குடியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் வரை பொறுத்திருப்போம்...

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி: பரமக்குடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: