ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உங்கள் தொகுதி: ஆற்காடு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: ஆற்காடு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: ஆற்காடு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

நவாப்புகள் ஆண்ட ஆற்காட்டில் அதிமுகவும், திமுகவும் மாறி, மாறி கோலோச்சி வருகின்றன. அந்த தொகுதி பற்றி உங்கள் தொகுதி அறிந்ததும். அறியாததும் தொகுப்பில் பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆறும், காடும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆற்காடு என வழங்கப்பட்ட இந்த ஊர் தனி மாவட்டமாக இருந்து பின்பு வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியானது. தற்போது அதுவும் மாறி ராணிப்பேட்டை மாவட்டத்தின் அங்கமாக இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் இந்த ஊரை தலைநகராகக் கொண்டு கர்நாடக பகுதிகளை ஆட்சி செய்தவர்களே ஆற்காடு நவாப்புகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கர்நாடக பகுதிகளில் வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்டிருந்தனர். ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் ஆற்காடு வந்தபோது நவாப்களின் வழித்தோன்றல்கள் இளவரசர்களாக அங்கீகரிக்கப்பட்டு இன்று வரை ஆற்காடு இளவரசர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்பதால் கோட்டைகளும், நினைவுச்சின்னங்களும் அதிகம்.

  நவாப்புகளால் போற்றப்பட்ட ஆற்காடு கிச்சிலி சம்பாவும், இந்த ஊருக்கே உரிய பிரியாணியும் இன்றும் சிறப்பு மிக்கவை. பார்ப்பதற்கு குலோப் ஜாமுன் போல இருக்கும் ஆற்காடு மக்கன் பேடா தித்திப்பானது... பாலாற்றின் கரையில் அமைந்துள்ள 1,100 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் முக்கியமான ஆன்மிகத் தலம். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெறும் மயான கொள்ளை சுற்றுவட்டாரத்தில் பிரபலமான திருவிழா. தொடர்ந்து 116 ஆண்டுகளாக வெளி வரும் சீதாராமய்யர் பரம்பரையின் ஆற்காடு பஞ்சாங்கம் ஊரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளைய வேலைவாய்ப்புக்கு பலரும் நம்பியுள்ளனர்.

  திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு வெற்றி பெற்று வரும் தொகுதி இது. இரு கட்சிகளும் தலா 6 முறை வென்றுள்ளன. அதில் இரண்டுமே ஒருமுறை ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

  2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.எல்.ஈஸ்வரப்பன் 84,182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் கே.வி.ராமதாஸ் 73,091 வாக்குகள் பெற்றார். ஆற்காடு தொகுதியில் 2,60,135 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,33,475 பேர் பெண்கள், 1,26,652 பேர் ஆண்கள். 8 திருநங்கைகள்.

  மேலும் படிக்க...KFJ நகை மோசடி - பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு

  போக்குவரத்து நெரிசல் பெரும் தலைவலியாக உள்ள ஆற்காட்டில் ஆரணிக்கான பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் வாக்காளர்கள். பாலாற்று நீரை பாசனத்திற்கு பெற அமைக்கப்பட்ட முப்பது வெட்டி கால்வாய், சாத்தூர் கால்வாய்கள் தற்போது நகரின் கழிவுநீரை வெளியேற்ற பயன்படும் நிலையில் இருப்பதால் அதனை தூர்வாரி சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.எஸ்.எஸ். கல்லூரி அருகே மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. ஆனாலும் வாக்களிக்க தயாராக காத்திருக்கிறார்கள் ஆற்காடு வாக்காளர்கள்.

  3 முறை தவிர்த்து மற்ற தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்ற வகையில் பார்க்கப்போனால் இந்த முறை அதிமுகதான் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் இந்த நம்பிக்கை பலிக்குமா அல்லது பொய்க்குமா.

  ' isDesktop="true" id="412133" youtubeid="LkE5XrPJztg" category="tamil-nadu">

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: TN Assembly Election 2021, Vellore