விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: September 30, 2019, 4:02 PM IST
  • Share this:
தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை வரை நாங்குநேரியில் 8 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகின்றன. அக்டோபர் 1-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


இதற்கிடையே, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இதேபோல, விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியும், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

இதேபோல, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபோதே இடைத்தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக தெரிவித்து இருந்ததாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாங்குநேரி, விக்கரவாண்டி இடைத்தேர்தல் பிரசார தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

மக்கள் தங்கள் பக்கம் இருப்பதால் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நெல்லை மாவட்ட அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் கே.பி.கே. செல்வராஜ் என்பவரை நாங்குநேரி இடை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக மாற்றி அறிவித்திருப்பது தொண்டர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது. இவர், நெல்லை மாவட்ட இணைய ஒன்றிய இயக்குனராகவும், ராதாபுரம் தாலுகா கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

First published: September 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்