ஆஷஸ் தொடர் 2021-22-ல் பிரிஸ்பன், அடிலெய்ட் இரண்டு டெஸ்ட்களிலும் தோற்றதன் மூலம் இங்கிலாந்தின் மோசமான கேப்டன் பட்டியலில் ஜோ ரூட் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இங்கிலாந்து அணி டிரா செய்ய போராடியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்த ஜோ ரூட், அதிக தோல்விகளை சந்தித்த கேப்டன் என்ற பரிதாபத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இங்கிலாந்து அணி சந்தித்த 23-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த இங்கிலாந்து கேப்டனான அலஸ்டயர் குக்கின் (22 தோல்வி) மோசமான சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் ஜோ ரூட் தலைமை இங்கிலாந்து அணி குறித்து முன்னாள் தொடக்க வீரர் ஜெஃப் பாய்காட் டெலிகிராப் பத்தி ஒன்றில் எழுதியதில், “நம் பேட்டர்கள் நன்றாக இல்லை என்பதை புரிந்து கொள்ளும் நேரம் இது, தொடக்க வீரர்களை எப்போது வேண்டுமானாலும் அவுட் ஆக்கலாம் என்று ஆடுகிறார்கள். இவர்கள் விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு பந்தை பிடுங்குகின்றனர்” என்று செம நக்கலாக எழுதியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போடு, “ராரி பர்ன்சியின் உறுதியை நாம் எத்தனை நாட்கள் பாராட்டிக் கொண்டே இருக்கிறது, அவரது டெக்னிக் அசிங்கமாக இருக்கிறது. கால்கள்,கைகள் எல்லாம் பந்து வரும் திசையைத் தவிர மற்ற இடங்களில் அலைபாய்கிறது” என்றார்.
Also Read: Ashes 2021-22- இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் இமாலயத் தவறுகள்
2-0 உதைக்குப் பிறகு தொடரை வென்ற ஒரே ஆஷஸ் அணி ஆஸ்திரேலியாதான் அதுவும் டான் பிராட்மேன் காலத்தில் நடந்தது, ரூட் என்ன பிராட்மேனா என்கிறது இன்னொரு ஊடகம்.
கெவின் பீட்டர்சன் கூறும்போது, “இங்கிலாந்து பேட்டிங் அப்பப்பா, பயங்கரம்” என்று கிண்டலடித்துள்ளார். கிரிக்கெட் எழுத்தாளர் நிக் ஹூல்ட் எழுதும் போது, “ஆஷஸ் தொடருக்கான 2 ஆண்டு கால திட்டம் 9 நாட்களில் பல்லிளித்து விட்டது” என்று கிண்டலடித்துள்ளார்.
ரூட்டின் கேப்டன்சி எதிர்காலம் நூலிழையில் தொங்குகிறது என்கிறது இன்னொரு ஊடகம். ஜோ ரூட் ஒரு பலவீனமான கேப்டன் என்று ஏற்கெனவே இயன் சாப்பல் எழுதிவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.