முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது.. ஆறுமுகசாமி ஆணையம் கூறியது என்ன? முழு விவரம்..!

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது.. ஆறுமுகசாமி ஆணையம் கூறியது என்ன? முழு விவரம்..!

ஜெயலலிதா

ஜெயலலிதா

சிகிச்சை தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்த பரிந்துரை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ள விவரங்கள் குறித்து இப்போது காணலாம்.

ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக, ஜெயலலிதாவுக்கு மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர். மயங்கி விழுந்த முதலமைச்சரை உடனடியாக ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக அனுமதித்தனர். முதல்கட்ட நோயறிதலுக்கு பின் அவர் ஐ.சி.யூ-வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, அவருக்கு சிறுநீர் தொற்றுக் காரணமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ அவசரநிலையான செப்சிஸ் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹைப்போ தைராடிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்ததாக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் மூலம் அறியப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016- செப்டம்பர் 27- ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதாவும், அடுத்த நாள் எடுக்கப்பட்ட transesophageal echocardiogram- சோதனையில் இதயத்தில் இரண்டு வெஜிடேசனும் பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஜிடேசன் என்பது, இதயத்தில் கிருமிகள் மற்றும் செல் துண்டுகளால் செய்யப்பட்ட ஒழுங்கற்ற வளர்ச்சிகள் ஆகும். இந்த கொத்துக்கள் தளர்ந்து மூளை, நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளுக்குச் செல்லும்.இதற்காக அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.ஆனால் ஜெயலலிதா இறக்கும் வரை ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப்படாதது புரியாத புதிர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read: மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அறுவை சிகிச்சை ஏன் நடக்கவில்லை? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் கேள்வி

ஜெயலலிதாவின் நுரையீரலில் இருபுறமும் திரவம் சேர்ந்திருந்ததாகவும் 2016, அக். 10 முதல் 13 வரை 3 லிட்டருக்கு மேல் திரவம் வெளியேற்றப்பட்டதாகவும் ஆணையம் கூறியுள்ளது.அக்டோபர் 5- ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ட்ரகியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பிறகு அவரால் சில நாள்கள் பேச முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை பரிந்துரைத்த உணவு வழங்கப்படாததால் உடல்நிலை வேகமாக மோசமடைந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. உணவுக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பழங்கள், இனிப்புகள் எடுத்துக் கொண்டார். மில்க் ஷேக், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமும் சாப்பிட்டார் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க | என் மீது பழிபோடுவது புதிதல்ல.. நான் சொல்வதை கேட்க அப்பல்லோ சாதாரண மருத்துவமனையா? - சசிகலா கொந்தளிப்பு

சிகிச்சை தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்த பரிந்துரைப்பட்டுள்ளது.ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனையால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதேநேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் எக்கோ டெக்னிசியன் நளினி ஆகியோரின் சாட்சியங்களின்படி, ஜெயலலிதா இறந்த நேரம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ துணைத் தலைவர் பிரிதா ரெட்டி ஆணையத்தில் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

சிகிச்சையில் முன்னேற்றமில்லாததால் எக்மோ சிகிச்சை தொடங்கப்பட்டதாகவும், டிசம்பர் 5 ஆம் தேதி அவரிடம் கண் அசைவு தென்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்துக்கு மேலாக எக்மோ சிகிச்சை தொடர முடியாது என்பதால், அப்போது முதலமைச்சர் பொறுப்பை கவனித்து வந்த ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் , முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சசிகலா ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டு, இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் பிரிதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இவை தவிர டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவாக ஆணையம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டதாக கூறியுள்ள ஆணையம், பூங்குன்றன் அளித்த தகவலின்படி டிசம்பர் 4 ஆம் தேதி 3 மணி முதல் 3.30 மணி வரை ஜெயலலிதா இறந்த முதலாண்டை தீபக் அனுசரித்தார் என்றும் கூறியுள்ளது.

First published:

Tags: Arumugasamy commission, Jayalalithaa Dead