பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து பல கோடி மோசடி செய்ததாக கடந்த மே மாதம் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழகம் முழுவதும் உள்ள 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அன்றைய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனராக பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை மட்டுமே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆருத்ராவின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமின் வாங்கினார்.
அதன் பின்னரான சோதனைகளில் ஆருத்ராவின் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கம் செய்தனர். இதில் மொத்தமாக 81 வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை முடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் ஏமாற்றப்பட்டவர்களுக்கு முடக்கம் செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களது விவரங்களை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வந்து அளிக்குமாறு தகவல் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜரத்தினம் மைதானத்தில் 2000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் விவரங்களை அளிப்பதற்காக குவிந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஆர்.டி.ஓ தலைமையில் ஏமாற்றப்பட்ட நபர்களின் விவரங்களை திரட்டி டோக்கன் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் டோக்கன் வாங்குவதற்காக இவ்வளவு நேரம் எல்லாம் காத்திருக்க முடியாது என்று கூறிய ஏமாற்றப்பட்ட நபர்கள் ராஜரத்தினம் மைதானத்தை விட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆருத்ரா நிறுவனம் தங்கள் வாழ்வை செழுமையாக்க வந்த நிறுவனம் எனவும் தேவையில்லாமல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தான் ஆருத்ராவை மோசடி நிறுவனம் எனக்கூறி பணத்தை முடக்கி உள்ளனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆருத்ரா நிறுவனம் எந்த ஒரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை எனவும் வேண்டுமென்றே காவல்துறையினர் அவர்களை கைது செய்தும் அவர்களின் பணத்தை முடக்கம் செய்தும் எங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாகி விட்டார்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே ஆருத்ரா நிறுவனத்திற்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
Also see... கடற்கரை பகுதிகளில் தனி ஒருவனாக மட்டுமே திருட்டு.. பெயிண்டர் வேலை பார்த்துக்கொண்டே திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பல கோடிக்கும் மேல் ஏமாற்றிய நிறுவனத்திடமிருந்து பணத்தை முடக்கி ஏமாற்றப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பியளிக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் பணம் கட்டிய மக்கள் ஆருத்ரா நிறுவனத்துக்கு ஆதரவாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.