இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி ஆணையர் 2019ஆம் அண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், கூறப்பட்டிருந்தது. இதேபோல, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் உத்தரவிட்டார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனிதா சுமந்த் நான்கு வாரங்களில் ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman, Chennai High court, GV Prakash