மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காததால் சுயமரியாதை வேண்டி 3000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 2-ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக 20 அடி உயர கருங்கல் சுவர் அருகில் இருந்த நான்கு வீடுகள் மீது இடிந்து விழுந்தது.
இதில் வீடுகளுக்குள் உறங்கி கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். நாடு முழுவதும் சோகத்தை ஏற்டுத்திய இந்நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தப்பட்டது.
உயிரிழப்பிற்கு காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், போராட்டம் நடத்தி மேட்டுப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கில் தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் நீதிமன்றம் மூலம் ஜாமின் பெற்றாலும் மற்றொரு வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதற்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நீதி கேட்டு போராடிய தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்னமும் சிறையில் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதற்கு நாதியற்ற நிலையில் உள்ளதாலும், கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவதாலும் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் 3000 பேர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுவதென முடிவெடுத்துள்ளதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த தமிழ் புலிகள் அமைப்பின் பொது செயலாளர் இளவேனில், தாங்கள் அனைவரும் வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி மதம் மாறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.