தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை பணி நிமித்தமாக லடாக் கிளேசியர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கருப்பசாமியின் உடல் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது பீரங்கி படை சுபேதார் பழனிசாமி தலைமையில், மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவருடன் 13-ஆவது கார்வெல் ரைபில் ஜூனியர் கமிஷன் அதிகாரி மன்பார்சிங், கார்டு கமாண்டர் நரேந்திரசிங் தலைமையில், 8 வீரர்கள் கருப்பசாமியின் உடலைப் பெற்று அவரது சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த திட்டங்குளத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு கருப்பசாமியின் உடலைப் பார்த்து மனைவி தமயந்தி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் கருப்பசாமியின் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, தெற்கு திட்டங்குளத்தில் உள்ள மயானத்தில், 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மயானத்தில் தமிழக அரசு சார்பில் இறந்த ராணுவவீரர் கருப்பசாமி உடலுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராணுவவீரர் கருப்பசாமி மனைவி கூறுகையில், “மகனையும் இராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன். என் கணவர் வீரமரணம் அடைந்துள்ளார். எப்போதுமே ராணுவத்தினை பற்றி தான் பேசுவார். எனது ஒரு மகளை ஐபிஎஸ் ஆக்குவேன். மகனை இராணுவத்திற்கு அனுப்புவேன். என் கணவர் எங்களுடன் தான் உள்ளார்” என்றார்.
லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
அதனைத்தொடர்ந்து 2-ஆம் வகுப்பு படிக்கும் கருப்பசாமியின் மூத்த மகள் கன்யா கூறுகையில், “தனது தந்தை தன்னை ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறுவார். ஊருக்கு வரும் போது இராணுவத்தினை பற்றியும், தேசப்பற்று பற்றியும்தான் கூறுவார். மேலும் விவசாயிகள் உழைப்பு பற்றியும் கூறுவார். என்னை போலீஸ் ஆக்க வேண்டும் என்பதற்காக ஊருக்கு வரும் போது பயிற்சி கொடுப்பார். எனது தந்தை புல்லட் வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அது முடியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.