ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தனது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து முற்பகல் 11.47 மணியளவில், Mi 17 V5 என்ற ஹெலிகாப்டர் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் இருந்தனர் இந்நிலையில், காட்டேரி மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது, 12.20 மணியளவில் விபத்துக்குள்ளானது.
Also Read: பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: இன்னும் 3 உடல்களை மீட்க வேண்டியுள்ளது - அமைச்சர் ராமச்சந்திரன்
வெலிங்டன் ராணுவ பள்ளியில் தரையிரங்குவதற்கு, 5-10 நிமிடங்கள் இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிக் கொண்டது. அடர்ந்த வனப்பகுதியில் விழுந்த ஹெலிகாப்டர் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியானது. தற்போது வரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாகதேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “ நீலகிரியில் மலைப்பாதையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, இதுவரை 11பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் வெகு விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில், “முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.