5 முறை தி.மு.க, 5 முறை அ.தி.மு.க - அரியலூர் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

2001ல் தி.மு.க ஆட்சியில் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டு, 2002ல் அ.தி.மு.க ஆட்சியில் மீண்டும் பெரம்பலூருடன் இணைக்கப்பட்டு மீண்டும் 2007ல் தி.மு.க ஆட்சியில் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட மாவட்டம்தான் அரியலூர்.

2001ல் தி.மு.க ஆட்சியில் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டு, 2002ல் அ.தி.மு.க ஆட்சியில் மீண்டும் பெரம்பலூருடன் இணைக்கப்பட்டு மீண்டும் 2007ல் தி.மு.க ஆட்சியில் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட மாவட்டம்தான் அரியலூர்.

 • Share this:
  கங்கைவரை படையெடுத்து சென்று, வெற்றிபெற்றதன் நினைவுச்சின்னமாக சோழமன்னன் இராஜேந்திரசோழனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில், யுனெஸ்கோவின் உலக மரபுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடக்கலையின்  பெருமையாக  விளங்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ளது ஸ்ரீபிரகதீஸ்வரர் கோவில். சின்ன திருப்பதி என்று கிராம மக்களால் அழைக்கப்படும் அரியலூர் அருகேயுள்ள அருள்மிகு  கலியுக வரதராஜபெருமாள் கோவில், தேவார மூவராலும் பாடல் பெற்ற திருமழபாடி ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோவில், வீரமாமுனிவரால் உருவாக்கப்பெற்ற புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயம் ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  திருத்தலங்களாகும்

  பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமி. டைனோசர் முட்டை உள்ளிட்ட பாசில் படிமங்கள் உள்ள புவியியல் பொக்கிஷம் நிறைந்த பகுதி. தமிழ்நாட்டிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்து எட்டு மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள்  உள்ள மாவட்டம். திருமானூர் டெல்டா பகுதியில் நெல், கரும்பு, பருத்தி, சோளம் அதிகம் விளைவிக்கப்படுகிறது,

  மறைந்த தி.மு.க தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம். 1953ம்ஆண்டு ஜுலை 15ம்தேதி கல்லக்குடி ரயில்நிலைய தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து, கைதுசெய்யப்பட்ட கருணாநிதி முதல்முதலாக சிறைப்பட்டு, அரியலூர் கிளைச்சிறையில் இரவு முழுவதும் கம்பிகளை பிடித்தபடியே நின்ற கருணாநிதிக்கு, வரலாற்றில் பெரும்புகழ் ஏற்படுத்திய மாவட்டம்.  தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதஅய்யர் தமிழ்பரப்பிய பகுதி. தமிழகத்தில் முதல்முதலாக இந்தியை எதிர்த்து 1964ம்ஆண்டு ஜனவரி 25ம்தேதி தீக்குளித்து இன்னுயிர் நீத்த கீழப்பழுவூர் சின்னச்சாமி பிறந்த மாவட்டம். இதன் காரணமாக, ஆண்டுதோறும் இத்தினம் மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

  அரியலூரில் பிறந்து கல்விப்பயின்று, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், திட்டக்குழு தலைவராகவும் பதவிவகித்த ரங்கராஜனின் பிறந்தஊர். மருதையாற்று ரயில்பாலத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் வெடிகுண்டு நாச வேலை காரணமாக இருமுறை ரயில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட உயரிழப்புகளால் இந்தியஅளவில் பரபரப்பு ஏற்படுத்திய தொகுதி.

  தமிழ் விடுதலைப்படை என்ற நக்சல் அமைப்பை ஏற்படுத்தி, ஒருகாலத்தில் இம்மாவட்டத்தின் முந்திரிகாடுகள் சலசலத்து, தொடர்ச்சியாக சந்தனகடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் வழங்கியது வரையிலான முந்திரிக்காடு டூ சந்தனக்காடு வரையிலான தொடர்புகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு, பின்னர் காவல்துறையின் அதிரடி கைது மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு நடவடிக்கைகளால் இன்று அமைதியாக உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தும் மாவட்டம்.  இவ்வாறு வரலாற்று புகழுடன், அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை உருவாக்கிய பெருமைமிகுந்த மாவட்டமாக விளங்கும் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் என்று இருந்த மூன்றுத் தொகுதிகள் தொகுதி மறுசீரப்பால் அரியலூர், ஜெயங்கொண்டம் என்று இரண்டு சட்டமன்ற தொகுதிகளாக மாறியுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள செந்துறை தாலுக்கா பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் போட்டி

  தி.மு.க  மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் கோட்டை என்று அழைக்கப்படும் இச்சட்டமன்றத் தொகுதியில், 1957 ஆம் வருடத் தேர்தலில் இருந்து 2016வரை தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும் ( த,மா,க 1 முறை ) வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் வன்னியர் 29% உடையார் 24% மூப்பனார் 22%  தாழ்த்தப்பட்டோர் 16% முஸ்லீம் 4% கிருஸ்தவர்கள் 3% மற்றும் இதர வகுப்பினர் தலா 2%  சதவீதமும் வாக்காளர்களாக உள்ளனர்.  தொகுதி சீரமைப்பிற்கு முன்னர் மூப்பனார், உடையார் சமூகத்தினர் அதிகம் இருந்ததால் போட்டியிடுபவர்கள் எதிரெதிர் வேட்பாளர்களாகவும், வெற்றி பெறுபவர்கள் இவர்களின் ஒரு சமூத்தினராகவே இருந்தனர். இந்நிலையில் தற்போது மறுசீரமைப்பால் வன்னியர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர்.  தற்போதைய நிலை

  அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தலா 5 முறை வெற்றிகளை பெற்றுள்ள தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளிடையே மீண்டும் நேரடி போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தி.மு.க:

  கடந்த தேர்தலில் களம் கண்டு தோல்வியுற்ற தி.மு.க வேட்பாளரான மாவட்டச்செயலாளர் சிவசங்கரே மீண்டும் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல் தற்போது தி.மு.க மாவட்ட அலுவலகத்திற்கு தனியிடம் வாங்கி கட்டமைப்புகளை உருவாக்கி, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். கடந்த தேர்தலில் உள்கட்சி பகையால் வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியை தழுவிய இவர் தற்போது அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

  MK Stalin
  திமுக தலைவர் ஸ்டாலின்


  மேலும் இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் மூன்றுமுறை போட்டியிட்டு, இருமுறை வெற்றிபெற்ற மூப்பனார் சமூகத்தை சேர்ந்த பாளை.அமரமூர்த்தியை தி.மு.கவில் இணைத்து கொண்டது கூடுதல் வாக்குபலத்தை தந்துள்ளது. தி.மு.க வாக்குவங்கி, வன்னியர் என்ற சாதியபலம், பாளை. அமரமூர்த்தியை இணைத்து கொண்டதால் மூப்பனார் சாதிய வாக்குபலம் ஆகியவற்றுடன் எளிமையாக பழககூடியவர், எப்போதும் அனுகக்கூடியவர், மக்களின் பிரச்னைகளுக்கு களம் காணுபவர் ஆகிய தகுதிகளோடு மீண்டும் களம் காணத்தயாராகி வருகிறார் சிவசங்கர்.

  அ.தி.மு.க:

  முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆதரவாளர் என்ற முகவரியோடு அ.தி.மு.க-வின் சார்பில் முதல்முறையாக களம் கண்டு வெற்றிபெற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசு கொறடாவாக அறிவிக்கப்பட்டவர் தாமரை.ராஜேந்திரன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரியலூர் மாவட்டத்திற்கு பலத்திட்டங்களை கொண்டுவந்தாலும், மருத்துவக்கல்லூரி கொண்டுவந்தது குறிப்பிட்ட சாதனையாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கான இடத்தை பெற்றுதந்துள்ளார். ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரியை அரசிடம் இருந்து பெற்றுத்தந்துள்ளார். இதுபோன்று உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் பெற்ற அதிக வெற்றிகள், மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க கூட்டணியைவிட அதிக வாக்குகள் பெற்றது ஆகிய காரணங்களை தனது பலமாக கொண்டுள்ளார்.

  கோப்பு படம்


  அடிமட்ட கட்சியினரிடம் எளிமையாக பழகும் விதம், விசுவாசிகளுக்கு பதவிகளை பெற்றுத்தருவது எனக்கட்சிகாரர்களிடம் நல்லமதிப்பை பெற்றுள்ளார். அ.தி.மு.க சார்பில் மீண்டும் இவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றுள்ளதால் இவர் எதிரணி வேட்பாளருக்கு கடுமையான போட்டியை தருவார். தேர்தலை எதிர்கொள்ளும் அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன் வாக்காளர்களை கவருவதற்கு தேவையான பொருள்களை தயார் செய்துகொண்டு களம் காணத்தயாராவிட்டார் என்பதே அ.தி.மு.க-வினரின் கருத்தாகும்.

  எனவே 2016ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க சிவசங்கரும், அ.தி.மு.க அரசுகொறடா தாமரை.ராஜேந்திரனும் களம் காணுவார்கள் என்று இருகட்சியினரும் உறுதிபட கூறுகின்றனர். தொகுதியை தக்கவைக்க அ.தி.மு.க-வும், 30ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியலூரை தங்கள் வசம் கொண்டுவர தி.மு.க-வும் தயாராகிவருகின்றன.

  அரியலூர் நீதிமன்றம்


  ஜஜேகே:

  மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் களம்காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்துவே அரியலூர் தொகுதியில் நேரடியாக களம் காணுவார் என்று கூறப்படுகிறது. இதன் ஒருப்பகுதியாக அண்மையில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26கிராமங்களில் தனது கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இது ஜஜேகே தொண்டர்களிடம் பெருமகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தில் உள்ள உடையார் மற்றும் மூப்பனார் சமூக வாக்குகள் அதிகம் உள்ளது. இத்தொகுதியில் ரவிபச்சமுத்து போட்டியிட்டு வெற்றிபெற்றால், இத்தொகுதி நல்ல வளர்ச்சி பெறும் எனும் நம்பிக்கையோடு தேர்தல் பணிகளை தொடங்கி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி ஐஜேகே நிர்வாகிகள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே வெறியேறியது அக்கட்சி தொண்டர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பிறகட்சிகள்

  பா.ம.க:

  வன்னியர் சமூக வாக்குகளை அதிகம் கொண்ட இத்தொகுதியில் வன்னியர் சங்கத்தலைவரும், பா.ம.கவின் முக்கியத்தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய காடுவெட்டி ஜெ.குருவின் மறைவிற்கு பிறகு, அவருடைய குடும்பத்தினருக்கு பா.ம.க தலைவர் ராமதாஸ் உதவிகள் செய்யவில்லை என்றுகூறி குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் தாயார் ஆகியோர் கண்டனக்குரல் எழுப்பியதால் வன்னிய சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் குருவின் மகன் கனலரசன் சமீபத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளித்துள்ளது இக்கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. மேலும் பா.ம.கவில் மாநில துணைச்செயலாளராக பதவிவகித்தவரும், குருவிற்கு வலதுகரமாக விளங்கிய வைத்தியலிங்கத்திற்கு பொறுப்புகளை நீக்கியதால் கட்சியினருக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் வன்னியர்கள் அதிகம் இருந்தாலும் கட்சியின் வாக்குகளில் பிளவு ஏற்பட்டுள்ளது.

  தே.மு.தி.க:

  இக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர் அ.தி.மு.க, தி.மு.க கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். மேலும் இக்கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு தீவிர பிரச்சாரங்கள் இல்லையென்பதால் வாக்குசதவீதம் குறைந்த நிலையில் உள்ளது.

  kamal torch light
  கமல்ஹாசன்.


  நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம்:

  இருகட்சிகளின் வேட்பாளர்களாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்களில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் குறிப்பிடத்தக்க வாக்குகளும், மக்கள் நீதிமையம் வேட்பாளர் குறைந்தளவு வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதேவேளையில் இத்தொகுதியில் இக்கட்சிப் பொறுப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களாகவோ, அதிகம் அறிமுகம் ஆனவர்களாகவோ இல்லை. கட்சித்தலைவர்களுக்கு அளிக்கும் வாக்குகளே இவர்களுக்கான வாக்குகளாக பதிவாகின்றன.

  எதிர்பார்ப்பு

  கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான போட்டியில் அ.தி.மு.க வேட்பாளராக களம் இறங்கிய தாமரை.ராஜேந்திரன் 2,401 ஓட்டுகளை மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது அ.தி.மு.கவில் மாவட்ட செயலாளர், அரசியலில் அரசு கொறடா என்று பெரிய பதவிகளை வகித்து வந்தாலும், அரியலூரில் அரசு மருத்துவகல்லூரி என்ற ஒருபெரிய திட்டத்தை தவிர மக்கள் மனம்கவரும் வகையில் எவ்வித பெரிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை என்ற குறைபாடு பொதுமக்கள் மனதில் உள்ளது. அதேவேளையில் அவரது சொந்த கட்சியினர் மத்தியிலும் குறிப்பிட்ட 10 பேர்தான் கடந்த நான்குஆண்டுகளில் நன்கு சம்பாதித்தனர், மற்ற அ.தி.மு.க கட்சி பொறுப்பாளர்களுக்குகூட ஒன்றும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகஅளவில் உள்ளது. எனவே இத்தொகுதியை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் தலா 5 முறை வெற்றிபெற்றுள்ள நிலையில் ஆறாவது வெற்றியை பெறப்போகும் கட்சி யார் என்பதை காண அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  அரியலூர் சட்டமன்ற தொகுதி

  மாவட்டத்தின் பெயர் : அரியலூர் மாவட்டம்

  சட்டமன்ற எண் - தொகுதி பெயர் : 149 அரியலூர்.

  வாக்களர்களின் எண்ணிக்கை

  ஆண்            வாக்காளர்கள்                                                :         1,31,335

  பெண் வாக்காளர்கள்                                                         :          1,32,670

  மூன்றாம் பாலின வாக்காளர்கள்                              :                       7

  மொத்தம்                                                                                      :       2,64,012

  சட்டமன்றத்திற்குட்பட்ட: அரியலூர், திருமானூர் ஊராட்சி  ஒன்றியங்கள்

  வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை                          : 39

  மொத்த ஊராட்சிகள்                                                              :  82

  சாதிவாரியான மக்கள் தொகை

  வன்னியர்                                              :               29%

  உடையார்                                              :               24%

  மூப்பனார்                                             :               22%

  தாழ்த்தப்பட்டோர்                          :               16%

  இஸ்லாமியர்கள்                                   :                 4%

  கிறிஸ்தவர்கள்                                    :               3%

  இதர வகுப்பினர்                                :               2%

   

  கடந்த தேர்தல்களில் தொகுதி நிலவரங்கள்

  1957 முதல் 2016 &ஆம் வருடம் வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் இதுவரை வெற்றி பெற்ற கட்சிகளின் நிலவரம்.

   தி.மு.க                                           :                                  5 முறை

  அ.தி.மு.க                                    :                                   5 முறை

  காங்கிரஸ்                                :                                   4 முறை (த.மா.க - 1)

  1957-ஆம் வருட தேர்தலில் இருந்து வெற்றி பெற்றவர்கள் விபரம்

  1957      ராமலிங்கபடையாச்சி     : காங்கிரஸ்

  1962       நாராயணன்                            : தி.மு.க

  1967      ஆர்.கருப்பையா                    : காங்கிரஸ்

  1971     சிவப்பெருமாள்                        :   தி.மு.க

  1977     த.ஆறுமுகம்                               :   தி.மு.க

  1980      த.ஆறுமுகம்                              :  தி.மு.க

  1984     எஸ்.புருஷோத்தமன்          :  அ.தி.மு.க

  1989     த.ஆறுமுகம்                              :  தி.மு.க

  1991      எஸ்.மணிமேகலை             :  அ.தி.மு.க

  1996    து.அமரமூர்த்தி                         :  த.மா.கா

  2001  ப.இளவழகன்                              :   அ.தி.மு.க

  2006  து.அமரமூர்த்தி                            :  காங்கிரஸ்

  2011  துரை.மணிவேல்                         :  அ.தி.மு.க

  2016  தாமரை.ராஜேந்திரன்              : அ.தி.மு.க

  2011 ஆம் வருட தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி     வித்தியாசம்

   

  1. துரை.மணிவேல் (அதிமுக)                                : 88,726   வாக்குகள்   ( 17,820
   வாக்குகள் வித்தியாசம்  )

  2. பாளை.அமரமூர்த்தி ( காங்கிரஸ்)                : 70,906  வாக்குகள்

  3. சி.பாஸ்கர்                         (ஜஜேகே)                        :  9,501  வாக்குகள்


   

  2016 ஆம் வருட தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி     வித்தியாசம்

   

  1. தாமரை.ராஜேந்திரன் ( அதிமுக)  : 88,303 வாக்குகள்    (2,401 வாக்குகள் வித்தியாசம்)

  2. எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக)              :  85,902

  3. ராம.ஜெயவேல்              (தேமுதிக)  :  13,549

  4. கே.திருமாவளவன்      ( பாமக)        :  13,425

  5. சி.பாஸ்கர்                         (ஜஜேகே)      :   1,327


  நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகள்

  1 . அரியலூரில் உள்ள ஒன்பது சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக உண்டாகும் உயிரிழப்புகளை தடுக்க சிமெண்ட் ஆலைக்கு செல்லும் லாரிகளுக்கு தனிப்பாதை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.

  2.  அரியலூர் பேருந்துநிலையத்தை விரிவுப்படுத்தவேண்டும். நகராட்சி என்ற போதிலும் அரியலூர் நகரில் அடிப்படை வசதிகளான குப்பை வாருதல், மின்விளக்குகள், குடிநீர், சாலை ஆகிய வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

  3. 1959-ல் தொடங்கப்பட்ட புள்ளம்பாடி வாய்க்காலை தூர்வாரி, மதகுகள் சீர்படுத்தி செப்பனிட வேண்டும். வழியில் உள்ள குளங்கள், ஏரிகளை தூர்வாருவது மூலம் கொள்ளிடத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். டெல்டா பகுதிகளான திருமானூர், தா.பழூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற விவசாயிகளின் கோரிக்கை இதுவரை தீர்க்கப்படவில்லை.

  4. பச்சைமலையில் உருவாகி சிறுவாச்சுர் வழியாக வரும் மருதையாற்று தண்ணீர் கொள்ளிடத்தில் கலந்து கடலுக்கு சென்று வீணாகிறது. இதன் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை பறவைகள் சரணாலயமான  கரைவெட்டி ஏரிக்கு  கொண்டு செல்ல வேண்டும் என்பது இதுவரை தீர்க்கப்படவில்லை

  5. திருமானூர் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் காக்க நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும்.

  6. திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பலமாவட்டங்களுக்கு ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மில்லியன் கனஅடி நீர் குடிநீருக்காக கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதளத்திற்கு சென்று வருகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி தடுப்பனைகள் கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

  செய்தியாளர் - கலைவாணன், அரியலூர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: