தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..

(கோப்புப்படம்)

Tamil Nadu Weather: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 • Share this:
  வடகிழக்குப் பருவமழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களிலும், பள்ளமான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், பிற்பகலில் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடியது. தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

  மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணல்மேடு, செம்பனார் கோயில், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. சம்பா சாகுபடி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மழை நீடித்தால் இந்தாண்டு விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர். வெளுத்து வாங்கிய கனமழையால், திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிற்றருவி போல கொட்டிய மழைநீரை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

  இந்நிலையில், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...பள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு..  சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: