‘மதுபாட்டில் மாலை.. மாட்டு வண்டி ஊர்வலம்... மண்பானை சில்லறை காசு’ - வேட்புமனுத் தாக்கலில் சுவாரஸ்யம்

ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்த மாணிக்கம் எம்.எல்.ஏ.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் சண்முகசுந்தரம், மண் பானையில் சில்லறை காசுகளை எடுத்துவந்து டெபாசிட் தொகையை செலுத்தினார்.

 • Share this:
  மதுபாட்டில்களை மாலையாக அணிந்துகொண்டு வந்த வேட்பாளர், ஒரே கூட்டணியில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் வேட்புமனுத் தாக்கலில் அரங்கேறியுள்ளன.

  சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அப்துல் வகாப் என்பவர், அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய, மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தான் தி.மு.க தேர்தல் அறிக்கை என்றார்.

  மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கான சுயேட்சை வேட்பாளரான சங்கரபாண்டி, நூதன முறையில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார்

  சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடராஜன் கிருஷ்ணமூர்த்தி, மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் கரும்புகளை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளரான சிவசண்முகம், எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தால் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வேன் என்று அடம்பிடித்து திரும்பிச் சென்றார்.

  இந்த நிலையில் சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான எம்.எல்.ஏ., மாணிக்கம், ஓபிஎஸ் மகன் காலை தொட்டு வணங்கினார். இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் சண்முகசுந்தரம், மண் பானையில் சில்லறை காசுகளை எடுத்துவந்து டெபாசிட் தொகையை செலுத்தினார்.

  நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கொரோனாவில் இருந்து மறுபிறவி எடுத்து வந்த தனக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

  சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் தன்னுடன் 5 பேரை அழைத்துச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தது சர்ச்சையாகியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் தன்னுடன் இருவரை மட்டும் அழைத்து செல்ல வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் கந்தன் 5 பேரை அழைத்துச்சென்றுள்ளார்.

  இதனிடையே புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில், ஒரே கூட்டணியைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவைச் சேர்ந்த ஜான்குமாரின் மகனான ரிச்சர்ட் பாஜக நிர்வாகிகளுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க செயலாளரான ஓம்சக்தி சேகரும் மனுத்தாக்கல் செய்தார். தொகுதியை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டு வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Ramprasath H
  First published: