• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Nivar Cyclone| வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக மாறும்.. தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..

Nivar Cyclone| வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக மாறும்.. தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் போது முன்னெச்சரிக்கையாக மின்தடை செய்யப்படும் என, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவான நிலையில், தொடர்ந்து வலுப்பெற்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், செவ்வாயன்று மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுக்கிறது. நாளை நிவர் புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 100-இல் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    புதன்கிழமை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழகம், ஆந்திர கடற்பகுதிகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. மழையை பொறுத்த வரையில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும்,பிற தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தமிழக கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், புயல் கரையை கடக்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நிவர் புயலால் மழை பெய்யும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும், அதனால் மின்வெட்டு என யாரும் நினைக்க வேண்டாம் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் படிக்க.. Cyclone Nivar | நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் தயார்நிலை..



    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள 1 லட்சம் சாக்குகள், 430 கன மீட்டர் மணல் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

    கஜா புயலை போல் நிவர் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடலுக்கு சென்ற மீனவர்கள் புயல் காரணமாக கரை திரும்பிக் கொண்டிருப்பதாக” தெரிவித்தார். புயல் உருவாக உள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: